யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் சம்பவம் எப்போதாவதுதான் நடக்கும். தற்போது வடக்கு கென்யாவில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போரா என்ற பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் 80 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒரு யானை இரட்டை குட்டிகளை ஈன்றது. இப்போது வடக்கு கென்யாவில் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மிகவும் அரிது என்பதால் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த இரு குட்டி யானைகள் இந்த வாரம்தான் வடக்கு கென்யாவின் சாம்புரு தேசிய ரிசர்வ் காடுகளில் பிறந்துள்ளன. இந்த இரு குட்டி யானைகளும் அங்குள்ள ஒரு அறக்கட்டளை நிறுவனமான 'சேவ் த எலிஃபண்ட்' எனும் நிறுவனத்தால் தத்தெடுக்கப்பட்டுள்ளன. அதன் நிறுவனர் லயன் டோகுல்ஸ் ஹேமில்டன், யானைகள் இரட்டை குட்டிகள் இடும் சம்பவம் உலகில் ஒரே ஒரு சதவிகிதம் தான் நிகழும், அதிலும் அவற்றிற்கு இரு குட்டிகளுக்கு கொடுக்க தேவையான பால் உற்பத்தி ஆவது சிரமமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கடைசியாக 2006ல் ஒரு யானை இரட்டை குட்டிகளை ஈன்றதாகவும், அவை துரதிர்ஷ்டவசமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். அப்படி ஏதும் நடக்காமல் இருக்க நல்ல உணவு கொடுத்து பராமரிக்க வேண்டும், என்று கூறினார்.






ஆப்பிரிக்காவின் யானைகள் உலகிலேயே பிரசவிக்க அதிக மாதங்கள் எடுத்துக்கொள்ளும் யானைகள் ஆகும். அவை பிரசவிக்க 22 மாதங்கள் எடுத்துக்கொள்கின்றன. சராசரியாக 4 வருடங்களுக்கு ஒருமுறை இந்த யானைகள் குட்டி ஈனுகின்றன. வெகு சீக்கிரமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்று ஆப்ரிக்கா யானை ஆகும். அவை தந்தங்களுக்காகவும், அதில் இருந்து எடுக்கப்படும் மருந்துக்காகவும் அதிகம் கொல்லப்படுகின்றன. ஆனால் ஆப்ரிக்கா சுற்றுலா துறை யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக கூறுகிறது. 1989ல் 16,000 யானைகள் இருந்ததாகவும் 2018ல் 34,000 யானைகள் உள்ளதாகவும் கணக்குகள் கூறுகின்றன. கென்யாவில் ஈன்ற யானைக்குட்டிகளின் விடியோவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.