இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது, கடந்தாண்டு இரண்டாவது அலை கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில், கடந்த டிசம்பர் இறுதி முதல் மீண்டும் கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


இந்த நிலையில், இந்தியாவின் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.






இதையடுத்து, குடியரசுத் துணைத்தலைவரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,  “ குடியரசுத்துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் உள்ளார். அவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்”  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இத்துடன் கொரோனா பாதிப்பு மிகவும் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும், வெளி இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக சென்று கொண்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண