ரிஷப் பந்த்...இந்தியாவின் கில்கிறிஸ்ட், தோனியின் வாரிசு, அடுத்த ஏபிடி என இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். பொறுப்பில்லாமல் இருப்பதற்கும் டென்ஷனை மறந்து ஜாலியாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சேவாக், டி வில்லியர்ஸ் போல பந்த் ஒரு ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். Under 19 உலககோப்பை, ஐபிஎல், ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை அடுத்து சர்வதேசப் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.




சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில் பந்த், பொறுப்பில்லாமல் விக்கெட்டை பறிகொடுக்கிறார் என விமர்சிக்கப்பட்டவர். எது பற்றியும் அலட்டிக் கொள்ளாத ரவி சாஸ்திரியே பந்த் கொஞ்சம் பார்த்து விளையாட வேண்டுமென எச்சரித்தார். சின்ன வயதில் இருந்தே மனம் போன போக்கில் மட்டுமே விளையாடிப் பழகிய பந்த்திற்கு இந்த விமர்சனங்கள் இன்னும் அதிக அழுத்தத்தை கொடுத்தன. விக்கெட் விட்டு விடக்கூடாது என ஆடியே நிறைய போட்டிகளில் சீக்கிரம் நடையைக் கட்டினார். ஒரு கட்டத்தில் ஒருநாள், T20 அணிகளில் இனி பந்த்திற்கு இடமில்லை என்ற நிலைமை ஏற்பட்டது. இனி அவ்வளவு தான் என எல்லாரும் நினைத்த பொழுது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதகளமாக பேட்டிங் செய்து, மீண்டும் ஒருநாள், T20 அணிகளில் இடம்பிடித்தார் பந்த்.




அணியில் இடமில்லை என ஒதுக்கியது அவருடைய பேட்டிங்கில் ஆவேசத்தை கூட்டியுள்ளதை பார்க்க முடிந்தது. ஆனால் முன்னைப் விட இப்போது மிகவும் ஜாலியாக விளையாட்டை ரசித்து ஆடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரின் போது ஒரு கையில் சிக்ஸர், டி வில்லியர்ஸ் போல 360° பேட்டிங் என பந்த் தன்னுடைய முத்திரையை பதித்திவிட்டார். வழக்கமாக T20 போட்டிகளில் நன்றாக ஆடுபவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என்ற ஒரு பேச்சு உண்டு. அதையும் தன்னுடைய அதிரடி பேட்டிங்கில் உடைத்து எறிந்துள்ளார் பந்த். 
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட எல்லா முக்கிய நாடுகளிலும் சதமடித்து அசத்தியிருக்கிறார். இந்த நேரத்தில் தான் டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன், ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகினார். அடுத்த கேப்டன் ஸ்மித்தா அஸ்வினா ரஹானேவா என விவாதங்கள் ஊடகங்களில் பேசுபொருளாக மாறின. யாருமே எதிர்பார்க்காத வகையில் பந்த் கேப்டன் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். இதற்கு பின்னணியில் டெல்லி பயிற்சியாளர் பாண்டிங் இருக்கிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. 




ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்த பாண்டிங்கிற்கு, பந்த்தின் ஆக்ரோஷமான ஆட்டம் பிடித்துப் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னைக்கு எதிரான போட்டியில் அணியை வெற்றிகரமாக வழிகாட்டிக் காட்டியுள்ளார் பந்த். இந்தத் தொடரில் பந்த் கேப்டனாக சிறப்பாக செயல்படும் பட்சத்தில்  கோலிக்கு பிறகு இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு விடையாக பந்த்தின் பெயரும் இருக்கலாம்.