கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் போட்டியிட்டார்.


பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.




 


இந்நிலையில், நேற்று அவருக்கு நுரையீரல் தொற்று தீவிரமானது. இதனால் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. மாதவராவ் கொரோனா பெருந்தொற்று சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற துயரமிகு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் - சட்டமன்ற உறுப்பினராக தமிழகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டிய அவரது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


 


பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் - அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.