Dutee Chand: அதிர்ச்சி.. இந்தியாவின் வேகமான பெண் டூட்டி சந்துக்கு, 4 ஆண்டுகள் தடை.. ஊக்கமருந்து சோதனையில் மீண்டும் தோல்வி

இந்தியாவின் வேகமான பெண்ணாக கருதப்படும் தடகள வீராங்கனை டூட்டி சந்த், நான்கு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்தியாவின் வேகமான பெண்ணாக கருதப்படும் தடகள வீராங்கனை டூட்டி சந்த், நான்கு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சோதனையில் தோல்வி:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி புவனேஷ்வரில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், தடகள வீராங்கனையான டூட்டி சந்த் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதாக முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, அதேமாதம் 26ம் தேதி மீண்டும் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதிலும் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க டூட்டி சந்திற்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பரிசோதனை முடிவுகள்:

இரண்டு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக வந்துள்ளன. அதாவது டூட்டி சந்தின் உடலில் தடை செய்யப்பட்ட அனபோலிக் ஏஜெண்டுகளான ஆண்டரைன், ஆஸ்டரைன் மற்றும் லிகண்ட்ரோல் இருந்துள்ளது. இரண்டாவது மாதிரியின் சோதனையிலும்,  அண்டரைன் மற்றும் ஆஸ்டரைன் ஆகியவை டூட்டி சந்தின் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறை குழு வெளியிட்ட அறிக்கையில் “ மாதிரி சேகரிக்கப்பட்ட டிசம்பர் 5, 2022 அன்றைய தினத்திலிருந்து தடகள வீராங்கனையான டூட்டி சந்த் பெற்ற அனைத்து போட்டி முடிவுகளும் தகுதி நீக்கம் செய்யப்படும். பதக்கங்கள், புள்ளிகள் மற்றும் பரிசுகள் பறிமுதல் செய்யபடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

டூட்டி சந்த் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்குப் பதிலாக, தனது பிசியோதெரபிஸ்ட் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் மூலமாகவே அவரது உடலில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இருந்ததாக கூறப்படுகிறது.

சாதனைகள்:

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் பாட்டியாலாவில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் (IGP) 4 போட்டியில், 100 மீட்டர் இலக்கை வெறும் அவர் 11.17 வினாடிகளில் கடந்து தேசிய அளவில் புதிய சாதனையைப் படைத்தார். இதன் காரணமாக டூட்டி சந்த் இந்தியாவின் அதிவேக வீராங்கனையாக கொண்டாடப்படுகிறார். 2018ம் ஆண்டு ஆசிய போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரிவில் வெள்ளி வென்று சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப்பின் அரையிறுதியில், 11.40 வினாடிகளில் தனது சீசனில் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்தார், ஆனால் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கத்தை ஹிமா தாஸிடம் இழந்தார்.

தொடரும் சோகம்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில், 400 மீட்டர் சாம்பியன் அஞ்சலி தேவி, ஃபெடரேஷன் கோப்பை தங்கப் பதக்கம் வென்ற வட்டு எறிதல் வீராங்கனை கிர்பால் சிங் மற்றும் 2020 தேசிய மகளிர் 59 கிலோ சாம்பியன் லிஃப்ட் எர்ரா தீக்ஷிதா ஆகியோர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த குறிப்பிடத்தக்க பெயர்களில் அடங்குவர். அதோடு, இந்த வாரம் புதாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 20 கிலோமீட்டர் பந்தய நடைப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே பெண் தடகள வீராங்கனையான பாவனா ஜாட், 12 மாதங்களுக்குள் ஊக்கமருந்து சோதனையில் மூன்று முறை தோல்வியடைந்ததால் விடு திரும்பினார்.

Continues below advertisement