FIDE World Cup 2023: செஸ் உலகக்கோப்பைத் தொடர் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அஜர்பைஜான் நாட்டில் உள்ள அந்த நாட்டின் தலைநகரான பாகுவில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக்கோப்பை போட்டி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகள் கால் இறுதிப்போட்டிகள் என முடிவடைந்து தற்போது இந்த தொடர் அரையிறுதியை எட்டியுள்ளது. 


இந்த தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். கால் இறுதி ஆட்டத்தில் கால் இறுதியில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரக்ஞானந்தாவும்  தெலுங்கானாவைச் சேர்ந்த அர்ஜுனும் சமனில் இருந்தனர். இதனை அடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடிய மூன்றாவது போட்டி நடந்தது.



இந்த போட்டி ரேபிட் செஸ் என்ற முறையில் நடந்தது. இதில் வீரர்கள் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தி விளையாட வேண்டும். ஒரு கட்டத்தில் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பிரக்ஞானந்தா முன்னிலையில் இருந்தார். மிகவும் விறுவிறுப்பாக இந்த சுற்று நடைபெற்றுக்கொண்டு இருந்தது.  அப்போது sudden death என்ற முறை கொண்டுவரப்பட்டது. இந்த sudden death சுற்றில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கபடுவர் என்பது விதிமுறை. 

மிகவும் வேகமாக சரியான முடிவெடுத்து இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதால் போட்டியை பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. திக் திக் என சென்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா  சிறப்பான முறையில் வெற்றி பெற்றார்.  இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரக்ஞானந்தா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


கால் இறுதி போட்டி மட்டும் தொடர்ந்து ஏழு சுற்றுகள் போட்டி நடைபெற்றதால் இந்தப் போட்டியை நேரடியாக பார்த்துக்கொண்டு இருந்த பிரக்ஞானந்தாவின் தாயார் மிகவும் பதற்றமாக காணப்பட்டார்.  பிரக்ஞானந்தா ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிக்கொண்டு இருந்தபோது ஒரு கட்டத்தில் அவர் கண்ணீர் விட்டு அழுத் தொடங்கினார். இறுதியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றவுடன் அவருடைய தாயார் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல்  பிரக்ஞானந்தாவைக் கட்டிப் பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி பாராட்டினார்.


போட்டியை வென்ற பின்னர் பிரக்ஞானந்தா ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இதனை அருகில் இருந்து பார்த்த பிரக்ஞானந்தாவின் தயார் பெருமிதத்துடன் காணப்பட்டார். இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 






அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரை இறுதி சுற்று வரை சென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரக்ஞானந்தாவிற்கு ட்வீட்டில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


இந்த வெற்றி மூலம் கேண்டிடேட்ஸ் சுற்றுக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். அந்த தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.