ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா, சௌத் கொரியா என மொத்தம் 6 அணிகள் விளையாடி வரும் இந்த தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா மற்றும் மலேசியா அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. 


இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை இன்றைய போட்டிகள் தீர்மானிக்கவுள்ளன. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, மூன்றாவது இடத்தில் சௌத் கொரியாவும் 4வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இரு அணிகளும் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் சௌத் கொரியா அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.  அதேபோல் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள் உள்ளன. 


இன்றைய மூன்று போட்டிகளில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள்தான் முதலில் மோதின. இதில் சீனா அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், ஜப்பான் அணிக்கு மட்டும் இந்த போட்டியில் 4 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்ற நிலையில் சீனாவை எதிர்த்து களமிறங்கியது. இதில் ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஜப்பான் அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவவேண்டும்.


இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மலேசியா மற்றும் சௌத் கொரியா அணிகள் மோதிக்கொண்டன. சௌத்கொரியா அணி இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா ஆனால் மட்டும் தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும். இந்நிலையில் நடப்புச் சாம்பியன் சொத் கொரியா களமிறங்கியது. ஆனால் மிகவும் பலமான மலேசியா அணி இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவுடனான போட்டியில் மட்டும் தோல்வியைச் சந்தித்திருந்தது. 


போட்டி துவங்கிய சிறுது நேரத்திலேயே மலேசிய அணி ஒரு கோல் அடித்தது. அதன் பின்னர் நடைபெற்ற மூன்று சுற்றுகளிலும் இரு அணிகளும் மேற்கொண்டு எந்த கோலும் ஆடிக்கவில்லை. இறுதியில் மலேசிய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 


இதனால் சௌத் கொரிய அணி 5 புள்ளிகளுடனும், பின் தங்கிய கோல் வித்தியாசத்தில் ஒரு கோலுடனும் புள்ளிப்பட்டியலில் உள்ளது. பாகிஸ்தான் அணியும் பின் தங்கிய கோல் வித்தியாசத்தில் ஒரு கோலுடன் இருப்பதால், இரு அணிகளும் ஒரே நிலையில் உள்ளன. ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால் தற்போது சௌத் கொரியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டிரா செய்தாலும் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு முன்னேறும். மாறக தோல்வியைத் தழுவினால், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி குறித்து முடிவு செய்யப்படும். அதாவது பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் இரண்டு கோல் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினால் ஜப்பான் அணி அரையிறுதிக்கு முன்னேறும், பாகிஸ்தான் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினால், வெற்றி மற்றும் கோல் கணக்குகளின் படி இறுதி முடிவு எடுக்கப்படும்.