சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி சீத்தாப்பழத்தில் 76 தேச தலைவர்களின் உருவங்களை வரைந்து அசத்தியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா. நகை தொழிலாளியான இவர், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்கத்தில் சிற்பங்கள் செய்வது, ஓவியங்கள் வரைவது போன்ற கலைப்படைப்புகளை உருவாக்குவது வழக்கம். தங்க கட்டிகள் மற்றும் அரிசி, முட்டை, மாம்பழம், உள்ளிட்ட பழங்களிலும் பல்வேறு ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். அண்மையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது உருவத்தை சப்பாத்தியில் நெருப்பு ஓவியமாக வரைந்து அசத்தினார். தொடர்ந்து ஓவியங்களில் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வரும் யு.எம்.டி. ராஜா, கடந்தாண்டில் சுதந்திர தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண் முட்டை ஓட்டின் உள்பகுதியில் வெள்ளை கருவிற்கும் முட்டை ஓட்டிற்கும் இடையே காணப்படும் மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து, அதனை கண் விழிப்பகுதியில் வைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நாட்டின் 76வது சுதந்திர தினம் வருகின்ற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதிதாக ஓவியத்தில் எதாவது செய்யலாம் என ராஜா முடிவு செய்துள்ளார். அதன்படி சீத்தாப்பழங்களில் 76 தேச தலைவர்களின் உருவங்களை ஓவியமாக வரைந்து உள்ளார். 76 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், 76 தேச தலைவர்களின் உருவங்களை வரைந்துள்ளார். மகாத்மா காந்தி, பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ், நேரு, கட்டபொம்மன், வேலுநாச்சியார் உள்ளிட்ட தலைவர்களின் ஓவியங்களை சீத்தாப்பழங்களில் தேசிய கொடி வண்ணத்தில் வரைந்துள்ளார்.
இது குறித்து யூ எம் டி ராஜா கூறுகையில், ”தங்க நகையில் பல்வேறு சிற்பங்கள் உருவாக்கி சாதனை படைத்தயுள்ளேன். வருடம் தோறும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, பல்வேறு வகையில் ஓவியங்கள் வரைந்து வருகிறேன். இந்த நிலையில் நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை போற்றும் வகையிலும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேச தலைவர்களின் உருவங்களை வித்தியாசமாக வரைய வேண்டும் என எண்ணினேன். அதன்படி சீத்தாப்பழத்தில் தலைவர்களின் ஓவியங்களை வரைந்துள்ளேன். இதற்காக இரவு முழுவதும் 12 மணி நேரம் தான் நேரத்தை செலவிட்டு வரைந்தேன். ஓவியங்கள் மற்றும் தங்கத்தில் சிலைகள் வடிவமைப்பதில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வந்தாலும், தற்போது தலைவர்களின் உருவத்தை சீத்தாப் பழத்தில் வரைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார்.
'சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்' - மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி