ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருவண்ணாமலை பிரசித்திபெற்ற வடவீதி சுப்பிரமணியர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. ஆடிக் கிருத்திகை அன்று முருகன் கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம். இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் நம்மை அச்சுறுத்தும் சக்திகளையும், எதிரிகளையும் அழிப்பார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
அந்த வகையில் திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று காலை முதல் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் பாலமுருகன் சந்தனகாப்பு அலங்காரத்ததில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்து சென்றனர். இதில் முருகர் பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை தீர்க்க பால் காவடி,பண்ணீர் காவடி, எடுத்து திருவண்ணாமலை மாடவீதியில் வீதி உலா வந்து முருகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் நாடழகானந்தல் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகையன்று சக்திவேல் சாந்த முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர் மாலை அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று விரதம் இருந்த பக்தர்கள் மார் மீது உரல் வைத்து உலக்கையால் மஞ்சள் தூள் இடித்தல், பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செக்கு இழுத்தலும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று 51-ம் ஆண்டு ஆடி கிருத்திகை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் விரதமிருந்து வேப்பம் தழை தரையில் போடப்பட்டு அதன் மேல் பக்தர்களை படுக்க வைத்து மார்பின் மீது உரல் வைத்து மஞ்சளை கொட்டி உலக்கையால் மஞ்சள் தூள் இடித்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செக்கில் எள்ளு கொட்டி செக்கு இழுத்து எள் எண்ணெய் ஆட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறவை காவடி எடுத்தனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகனை வழிபட்டு சென்றனர்.