சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனியின் நிழலில் நீண்ட காலமாக இருப்பவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என்பதால் அவருக்கு ஒரு ஃபாதர் பிகர் தேவைப்பட்டது. அதற்கு ஏற்ற மாதிரி தோனியும் தன் தம்பி போலவே ரெய்னாவை பார்த்துக்கொண்டார். கிட்டத்தட்ட அவருக்கு ஒரு உடன்பிறவாத சகோதரன் போல. கோலி, ரோஹித் மாதிரி ரெய்னா ஒரு பர்ஃபெக்ட் பேட்மென் என்று சொல்ல முடியாது. ஆனால் தனக்கு இருக்கும் திறமையை அணியின் வெற்றிக்கு முழுதாக அர்ப்பணித்தவர்.
கங்குலி, யுவராஜ் சிங் போலவே ரெய்னாவுக்கும் ஷார்ட் பால் ஆடுவதில் சிக்கல் இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சீக்கிரமே ஓய்வுபெற்றதற்கு அதுவும் கூட ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஆனால் விக்கெட் இழப்பதை பற்றி கவலைப்படாமல் தைரியமாக அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன். ஆரம்ப காலத்தில் கைஃப், யுவராஜ் சிங்கிற்கு சவால் விடும் விதத்தில் பீல்டிங் செய்தவர். பேட்டிங், பீல்டிங் மட்டுமில்லால் தன்னுடைய ஆஃப் ஸ்பின் மூலமாக சிக்கனமாக பந்துவீசி விக்கெட் எடுக்கும் திறமையும் ரெய்னாவுக்கு இருந்தது. 2008-இல் ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமான காலத்தில் இருந்தே சி.எஸ்.கே. அணியின் ரெகுலர் வீரர்களில் ஒருவராக இருந்தவர் அவர்.
ஒன் டவுன் ஸ்பாட் என்பது அவருக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. ஆனால், கடந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அது அணி நிர்வாகத்தினருக்கு ரெய்னா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, தோனியுடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சினையால்தான் அவர் துபாயில் இருந்து கிளம்பி சென்றார் என ஊடகங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் சி.எஸ்.கே. அணியின் துணை கேப்டனாக இணைந்திருக்கிறார் ரெய்னா. ஆனால், அணி நிர்வாகத்துக்கு ரெய்னா மீது வைத்திருந்த நம்பிக்கை குறைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. ரெய்னா மட்டும் இல்லாமல் இந்த முறை ஜடேஜாவும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட தோனிக்கு இது கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கும் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரை வெற்றியோடு வழியனுப்ப அணி வீரர்கள் முயற்சி செய்வார்கள். அதில் ரெய்னாவின் பங்கு அதிகமாக இருக்கும் என்பது மறுப்பதற்கு இல்லை. தன்னுடைய திறமையை முழுமையாக நிரூபித்து அணியில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ள அவர் கடுமையாக போராடுவார். தல கோப்பையை வெல்ல சின்னத் தல என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.