உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் ஐ.பி.எல். கடந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் ரசிகர்கள் ஆரவாரம் இன்றி நடைபெற்ற ஐ.பி.எல். தொடர் இந்த முறை இந்திய மண்ணில் மீண்டும் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.


இதையடுத்து, ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எல். ஆட்டம் இன்று சென்னையில் தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.




மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, குவிண்டின் டி காக், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பொல்லார்ட், பும்ரா என்று நட்சத்திர பட்டாளமே உள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் உள்ளனர்.


மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே 5 முறை சாம்பியன்ஸ் என்ற உத்வேகத்துடன் களமிறங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு எத்தனையோ வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள விராட் கோலிக்கு, ஐ.பி.எல். என்பது மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால், இந்த முறை கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் களத்தில் இறங்குகின்றனர்.





ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுமே இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 17 ஆட்டங்களிலும், பெங்களூர் அணி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது. அந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.


விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9வது ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறது. 2013ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக உள்ளார். இரு அணிகளிலும் மிகப்பெரிய பலம், அந்தந்த அணிகளின் கேப்டன்களாகிய விராட் கோலியும், ரோகித் சர்மாவுமே.




விராட் கோலி இதுவரை ஐ.பி.எல். தொடரில் 192 ஆட்டங்களில் விளையாடி 5 ஆயிரத்து 878 ரன்களை சேர்த்துள்ளார். ரோகித் சர்மா இதுவரை 200 ஆட்டங்களில் விளையாடி 5 ஆயிரத்து 230 ரன்களை குவித்துள்ளார். இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால், இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


சென்னையில் இன்று மாலை 7.30 மணியளவில் இந்த ஆட்டம் தொடங்குகிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் எந்த அணிக்கும் அதன் சொந்த மண்ணில் நேரடி போட்டிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.