கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய, உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை யாருக்கு என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 08.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ளது. உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் 35 வயதான, மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலககோப்பை தொடராகும். இதன் காரணமாக, இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத அவர் வெற்றியுடன் உலகக்கோப்பையை நிறைவு செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேநேரம், இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக செயல்படுவதன் மூலம், பல்வேறு புதிய சாதனைகளை படைக்கும் வாய்ப்பும் மெஸ்ஸிக்கு உள்ளது.


01. உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர்: 


உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை மெஸ்ஸி இதுவரை 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இன்றைய இறுதிப்போட்டியில் அவர் தலைமையிலான அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றால், உலகக்கோப்பை தொடரில் அவர் பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை 17 ஆக உயரும். அதன் மூலம் கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற, ஜெர்மனியின் ஜாம்பவானான மிரோஸ்லாவ் க்ளோஸின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்வார்.


02. உலகக்கோப்பையில் அதிக அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர்:


இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி களமிறங்குவதன் மூலம், உலகக்கோப்பை தொடர்களில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை கொண்ட ஜெர்மனியின் லோதர் மத்தாஸை (25 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி மெஸ்ஸி முதலிடம் பிடிப்பார்.


03. உலகக்கோப்பை தொடரில் அதிக நேரம் விளையாடிய வீரர்:


இத்தாலியின் ஜாம்பவான் பாவ்லோ மால்டினி உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நிமிடங்கள் விளையாடியவர் என்ற பட்டியலில்,  2,217 நிமிடங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அந்த பட்டியலில் 2,194 நிமிடங்கள் உடன் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே, 23 நிமிடங்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், இன்றைய போட்டியில் பாதி நேரம் விளையாடினாலே, உலகக்கோப்பை தொடரில் அதிக நேரம் விளையாடிய வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெறுவார்.


04. உலகக் கோப்பையில் அதிக உதவிகள்: 


உலகக்கோப்பை தொடரில் கோல் அடிப்பதற்கு அதிக முறை அசிஸ்ட் செய்த வீரர்களின் பட்டியலில், பிரேசிலை சேர்ந்த ஜாம்பவானான பீலே 11 அசிஸ்ட்களுடன் முதலிடத்தில் உள்ளார். அந்த வரிசையில் 9 அசிஸ்ட்களுடன் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் குறைந்தது இரண்டு கோல் அடிக்க அவர் அசிஸ்ட் செய்யும் பட்சத்தில், பீலேவின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்யக் கூடும்.


 


05. அதிகமுறை கோல்டன் பால் விருதை வெல்லும் வீரர் மெஸ்ஸி?  


2014ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின்போது சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, மெஸ்ஸிக்கு கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது. சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்படும் வீரருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. நடப்பாண்டும் அந்த விருதை வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியலில் மெஸ்ஸி பெயர் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு வெல்லும் பட்சத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கோல்டன் பால் விருதை வென்ற முதல் வீரர் எனும் பெருமை, மெஸ்ஸியை சென்றடையும்.


06.கோல்டன் பூட், கோல்டன் பால் இரண்டையும் வென்றவர்:


உலகக் கோப்பை தொடரில் அதிக கோல் அடித்தவருக்கு கோல்டன் பூட்  விருது வழங்கப்படுகிறது. உலகக்கோப்பை வரலாற்றில் கோல்டன் பால் மற்றும் கோல்டன் பூட் எனும் இரண்டு முக்கிய விருதுகளையும்,  லியோனிடாஸ் டா சில்வா (1938), கரிஞ்சா (1962), ரொனால்டோ (1998 கோல்டன் பால், 2002 கோல்டன் பூட்), பாவ்லோ ரோஸ்ஸி (1982), சால்வடோர் ஷிலாசி (1990), மற்றும் அர்ஜென்டினாவின் முன்னாள் நட்சத்திரம் மரியோ கெம்பஸ் (1978) ஆகிய ஏழு வீரர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.  இந்நிலையில், நடப்பு தொடரில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே ஆகியோர் தலா ஐந்து கோல்களுடன் கோல்டன் பூட் விருதுக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர். மெஸ்ஸி இன்றைய போட்டியில் கூடுதலாக ஒரு கோல் அடித்து கோல்டன் பூட்டை கைப்பற்றினால், கோல்டன் பூட் மற்றும் கோல்டன் பால் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்ற 8வது வீரர் எனும் பெருமை மெஸ்ஸிக்கு கிடைக்கும்.


07. அதிகப்படியான கோல் பங்களிப்புகள்: 


பிரேசில் ஜாம்பவான் பீலே,  12 கோல்கள் மற்றும் 10 உதவிகள் உட்பட 22 கோல் பங்களிப்புகளுடன்,  உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் அதிக கோல் பங்களிப்பில் முதலிடம் பிடித்துள்ளார். அந்த வரிசையில்,  11 கோல்கள் மற்றும் ஒன்பது உதவிகள் உட்பட 20 கோல் பங்களிப்புடன் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படுவதன் மூலம்,  பீலேவின் சாதனையை முறியடிக்க அல்லது சமன் செய்ய மெஸ்ஸிக்கு வாய்ப்பு உள்ளது.