ஒடிசாவில் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடந்த ஆண்டு விளையாட்டு போட்டியின்போது மாணவனின் கழுத்தில் ஈட்டி பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஈட்டி பாய்ந்ததில் சதானந்த் மெஹர் என்ற 9 வகுப்பு மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், தற்போது அந்த மாணவன் சிகிச்சை பலனாய் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக பள்ளி ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


ஒடிசா பலங்கிர் மாவட்டத்தில் உள்ள அகல்பூர் ஆண்கள் பஞ்சாயத்து மேல்நிலைப்பள்ளியில் நேற்று (சனிக்கிழமை) ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றுள்ளது. விளையாட்டு விழாவின்போது மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 


இந்தநிலையில், சதானந்த் மெஹர் விளையாட்டு போட்டியின்போது எதிர்பாராத விதமாக மைதானத்திற்குள் நடந்து சென்றுள்ளார். அப்போது, ஒரு மாணவர் ஈட்டியை எறிந்துள்ளார். அங்கே நடந்துசென்ற மெஹரின் கழுத்தில் அந்த ஈட்டி பாய்ந்துள்ளது. இதையடுத்து, மெஹர் உடனடியாக பலங்கிரில் உள்ள பீமா போய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரது கழுத்தில் இருந்த ஈட்டியை வெளியே எடுத்தனர். மெஹர் தற்போது மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 


நிவாரண நிதி:


தொடர்ந்து, மாணவரின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.30, 000 உதவி வழங்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அவரது சிகிச்சைக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து உதவி வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.


பிபிஎம்சிஎச் மருத்துவ கண்காணிப்பாளர் மான்சி பாண்டா கூறுகையில், ஈட்டி தோலுக்கு சற்று கீழே வைக்கப்பட்டு தசை அடுக்கு சேதமடைந்துள்ளது. உள் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளது. ஈட்டியின் உலோகத் தலையை அகற்றிய பிறகு, அறுவைசிகிச்சைக்குப் பின்பு நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க அவரை 72 மணிநேரம் கண்காணிப்பில் வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார். 


இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி துருபா சரண் பெஹெரா தெரிவிக்கையில், “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நாங்கள் அதை விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.