கொரோனா காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் போது, செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளையும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில், தூய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 172 உயர்நிலைப்பள்ளிகள், 185 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 357 பள்ளிகளும் வருகிற 1-ந்தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளி வளாகம், வகுப்பறை, அறிவியல் ஆய்வகம், ஆசிரியர், தலைமை ஆசிரியர் அறைகள், கணினி அறை, குடிநீர் தொட்டி, கழிவறை ஆகியவற்றை பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மைப்பணியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகம், வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமர வைக்க வேண்டும், சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்கலாம், மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும், பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கை கழுவுவதற்கு ஏதுவாக சோப்பும், நீரும் இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய ஒவ்வொரு வகுப்பறையிலும் சானிடைசரை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும், இதையெல்லாம் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா பரவல் குறைந்ததையடுத்து 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 357 பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணிகளை கண்காணிக்க தாலுகா அளவில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று தூய்மைப்படுத்தும் பணிகள் முழுமையாக நடக்கிறதா என்று கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அலுவலர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தமுள்ள 8,941 பேரில் இதுவரை 7,869 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 88 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் ஓரிரு நாட்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணன், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்.