கிரிக்கெட் போட்டிகளில் சில நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளுக்கு என்று எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமும், பலத்த எதிர்பார்ப்பும் உண்டு. அந்த வரிசையில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள்.
உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க உள்ள நாடுகளின் பிரிவு ஏ, பிரிவு பி அட்டவணையை கடந்த வாரம் ஐ.சி.சி. வெளியிட்டது.
இந்த பட்டியலில், பிரிவு பி பிரிவில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தால், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இடம்பெற்றுள்ளது. இதனால், போட்டி அட்டவணை வெளியிட்டது முதல் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தியாவும், பாகிஸ்தானும் இங்கிலாந்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலககோப்பை போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பிறகு இரு அணிகளுக்கு இடையேயும் எந்த போட்டியும் நடைபெறவில்லை.
இந்த போட்டி தொடர்பாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சோயிப் அக்தர் கூறியிருப்பதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுக்கு சாதகமானதாகும். உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்பேட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும் என்று எனது உணர்வு கூறுகிறது. அந்த போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடிக்கும்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இதுவரை 8 டி20 போட்டிகள் இதுவரை நடைபெற்றுள்ளது. இந்த போட்டிகளில் இந்திய அணி 6 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்திற்கு முடிவு கிடைக்கவில்லை. 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 7 முறை இந்தியாவிற்கு எதிராக விளையாடியுள்ள பாகிஸ்தான் 7 போட்டிகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது. டி20 மற்றும் 50 ஓவர் வடிவிலான உலககோப்பை போட்டிகளில் மொத்தம் 12 முறை இந்தியாவுடன் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட இதுவரை வெற்றி பெற்றது இல்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி20 போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணி 192 ரன்களை 2012ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குவித்துள்ளது. குறைந்தபட்ச ரன்னாக 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி 83 ரன்களுக்கு சுருண்டது பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக இந்திய கேப்டன் விராட் கோலி 78 ரன் சேர்த்துள்ளார். ஒரு டி20 போட்டியில் அதிகபட்ச விக்கெட்டாக பாகிஸஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் 4 விக்கெட்டுகளை 18 ரன்களை விட்டுக்கொடுத்து கைப்பற்றியது பதிவாகியுள்ளது.
முதலாவது டி20 உலககோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி சோயிப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் உலககோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.