அமமுக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்த அபிமானம் மெல்ல மெல்ல சரிந்து கொண்டே இருக்கிறது. மிஸ்டர் கூல் என்று ஊடகங்களால் கொண்டாடப்பட்ட டிடிவி தினகரனை ட்விட்டரைத் தாண்டி காண முடியவில்லை. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் இந்த நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது.
பின்னணியில் சசிகலா..
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திடீரென காக்கும் அமைத்திக்குப் பின்னணியில் அவருடைய சித்தி வி.கே.சசிகலா இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுக பொதுச் செயலாளராக்கப்பட்டார் வி.கே.சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கு இறுகும்முன் சசிகலா தனது 'நம்பிக்கைக்குரியவர்' எனக் கருதி எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்கிவிட்டு ஜெ. சமாதியில் சபதம் செய்துவிட்டு பெங்களூரு சிறைக்குச் சென்றார்.
ஆனால், அவரது நம்பிக்கை தவிடுபொடியானது. அவர் விட்டுச் சென்ற எடப்பாடி பழனிசாமியும், அவருடன் எதிரும் புதிருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் கைகோத்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டனர். சசிகலா புறக்கணிக்கப்பட்டார், டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.
இந்தநிலையில்தான் அவர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால், அப்போதே அதற்கு சிறையிலிருந்து சசிகலா முட்டுக்கட்டை போட்டதாகக் கூறப்பட்டது.
ஆனாலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை டிடிவி தினகரன் நிறுவினார். இதற்கு அவருடைய குடும்பத்துக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், டிடிவி தினகரனின் தெளிவான பேச்சுகளும், நிதானமான அரசியல் பேட்டிகளும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது.
தங்கத்தமிழ்ச் செல்வன், புகழேந்தி, வெற்றிச்செல்வன் என டிடிவி தினகரனுக்கு ஆதரவு பெருகுகிறது. அதிமுகவுக்கு செக் வைக்கத் தொடங்கினார் டிடிவி தினகரன். ஆனால், திடீரென அவருக்கு எதிராக தங்கத்தமிழ்ச் செல்வன் போர்க்கொடி தூக்கினர். அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். புகழேந்தி மீண்டும் தாய்க்கழகதுக்கே சென்றார். இப்படியாக அமமுக சரிவை சந்தித்தது. கடந்த மக்களவைத் தேர்தலிலேயே அமமுக பின்னடைவைச் சந்தித்தது. இந்த நிலையில்தான் சசிகலா சிறையிலிருந்து திரும்பினார். ஆனால், அவரது கவனமெல்லாம் அதிமுகவை கைப்பற்றுவதாக மட்டுமே இன்றளவும் இருந்தது. அவர், தேர்தலுக்கு முன்னதாக இப்போதைக்கு ஒதுங்கியிருக்கிறேன்...எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுங்கள் என்று கடிதம் எழுதியதுகூட அதிமுக வாக்குவங்கி சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே. அதிமுக அமமுக இணைப்புக்கு பெருமளவில் முயற்சித்தார். முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், எதற்கும் மசியாத எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சசிகலாவுக்கு ட்ஃப் ஃபைட் கொடுத்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகி அதிமுக, திமுகவுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்தான் சசிகலா, டிடிவி தினகரனை ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது அவர், கொஞ்சம் காலம் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருங்கள். கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
அதிமுகவை நிச்சயம் மீட்பேன் என்று சசிகலா அதிமுகவினரிடம் பேசிய ஆடியோ டேப்புகள் சமீபகாலமாக பிரபலமாக இருக்க, அந்த வரிசையில் அமமுகவை சீர்படுத்த அவர் பேசியுள்ளதாகவும் ஒருபுறம் தகவல் வெளியாகி இருக்கிறது.