2008லேயே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், சச்சின் தான் முடிவை மாற்றினார் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
இன்னும் நிரப்பப்படாத சேவாக்கின் இடம்:
90ஸ்களின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சேவாக் நிச்சயம் இருப்பார். அந்த அளவிற்கு தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை கலங்கடித்த வீரரான சேவாக்கை எவராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 7 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இப்போது வரை இந்திய கிரிக்கெட் அணியில் சேவாக் விட்டுச் சென்ற அதிரடி ஓப்பனிங் இன்னும் நிரப்பப்படாமலேயே இருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிலையில், சமீபத்தில் க்ரிக் பஸ் நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள சேவாக், தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால் 2008லேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற நினைத்ததாகக் கூறியுள்ளார்.
2008ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் இந்த எண்ணம் என்னுள் தோன்றியது. ஃபார்மில் இல்லாமல் இருந்த நிலையில், கும்ப்ளே தலைமையிலான அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 ரன்களை விளாசினேன். ஆனால், 3 அல்லது 4 ஒருநாள் போட்டிகளில் ஒழுங்காக விளையாடவிலை. அதனால் தோனி என்னை அணியில் இருந்து விடுவித்துவிட்டார். அந்த சமயத்தில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டை மட்டும் விளையாடலாமா என்று எண்ணினேன் என்று கூறியுள்ளார்.
தொடர் சொதப்பல் பேட்டிங்:
ஆஸ்திரேலியா நடத்திய காமன்வெல்த் முத்தரப்புத் தொடரில் 10 போட்டிகளில் 5ல் மட்டுமே விளையாடிய சேவாக் முதல் நான்கு போட்டிகளில் 6, 33, 11, 14 ரன்களை மட்டுமே எடுக்க, அடிலெய்டில் நடைபெற்ற அடுத்த இரண்டு போட்டிகளுக்கு சேவாக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு சிட்னியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற சேவாக் அந்த போட்டியில் 14 ரன்கள் எடுக்க மீண்டும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சச்சினின் அறிவுரை:
ஓய்வு அறிவிப்பை வெளியிடும் முடிவில் இருந்த சேவாக்கை தடுத்து நிறுத்தியது சச்சின் தான் என்பதை நினைவு கூர்ந்துள்ள சேவாக், “இந்து உங்கள் வாழ்க்கையின் மோசமான காலகட்டம். கொஞ்சம் பொறுத்திருங்கள். இந்த பயணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் செல்லுங்கள். நன்றாக சிந்தியுங்கள். என்ன செய்யலாம் என்று பிறகு முடிவெடுங்கள்” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியதாகவும், சச்சின் இல்லாமல் இருந்திருந்தால் ஓய்வு முடிவை அறிவித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
விராட் கோலியின் ஃபார்ம் அவுட் பற்றி சேவாக் கருத்து:
அதன் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்பட சுமார் 7-8 ஆண்டுகள் விளையாடிய சேவாக், பின்னர் அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது குறித்து சேவாக்கிடம் கேட்டபோது, “இரண்டு வகையான ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். யார் சவால்களை விரும்புகிறார்களோ அந்த சமயங்களில் சந்தோசமாக இருப்பார்கள். விராட்கோலி அவர்களில் ஒருவர். அவர் எல்லா விமர்சனங்களையும் கவனிக்கிறார், மைதானத்தில் அதிக ரன்களை அடிப்பதன் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுக்கிறார். மற்றொரு வகையினர் இருக்கிறர்கள். அவர்கள் இந்துபோன்ற கூச்சல்களால் பாதிக்கப்படவே மாட்டார்கள். ஏனென்றால் இறுதியில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். நான் அந்த வகை ஆட்டக்காரர். நான் யார் என்னை விமர்சிக்கிறார்கள் என்பது பற்றி கண்டுகொள்ள மாட்டேன். நான் விளையாட வேண்டும்; ரன்கள் எடுத்துவிட்டு வீட்டுக்குப் போக வேண்டும் அவ்வளவு தான்” என்று கூறியுள்ளார்.