தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ் நிலையம் பின்புறமுள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் முரளி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக கூறி செவிலியராக பணிபுரிந்த 24 வயது இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த இளம் பெண் கடந்த 20ந்தேதி கோவில்பட்டி அண்ணாபஸ் நிலையம் பின்புறமுள்ள முரளி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிக்கு சேர்ந்துள்ளார். கடந்த 23ந்தேதி அந்த மருத்துவமனையின் மருத்துவர் முரளி (50) உள் நோயாளிகளை பார்வையிடுவதற்காக சென்ற போது, அந்த இளம் பெண்ணையும் உடன் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.


 


அப்போது திடீரென மருத்துவர் முரளி, இளம்பெண்ணின் கையை பிடித்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையெடுத்து அந்த இளம்பெண் மருத்துவரை கண்டித்தது மட்டுமின்றி, மருத்துவர் முரளியின் மனைவி விமலாதேவியிடம் புகார் தெரிவித்துள்ளார். விமலாதேவி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். ஆனால் இளம்பெண்ணின் புகாரை மறுத்தது மட்டுமின்றி, பொய் செல்வதாக கூறி திட்டியது மட்டுமின்றி, இனி மருத்துவமனைக்கு வரக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து அந்த பெண், மருத்துவமனையில் நடந்தது பற்றி தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். மேலும் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தூக்க மாத்திரை மற்றும் பினாயில் ஆகியவற்றை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அவர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் முதலில் இளம்பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தர மறுத்ததாக கூறப்படுகிறது. காரணம் இளம்பெண் புகார் தெரிவித்துள்ள மருத்துவர் முரளியின் மனைவி விமலாதேவி அங்கு மருத்துவராக பணிபுரிவதால் எனக்கூறப்படுகிறது. அதன் பின்னர் இளம் பெண்ணின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.பாலாஜிசரவணணிடம் புகார் தெரிவித்துள்ளனர்.


அவர் நடவடிக்கையை தொடர்ந்து அரசு மருத்துமவனையில் இளம்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மட்டுமின்றி, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஜெயந்தி கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி, தனியார் மருத்துவமனை மருத்துவர் முரளி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.




மருத்துவர் முரளி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இது குறித்து அவரது மனைவி விமலாதேவியிடம் புகார் தெரிவித்தாகவும், அவர் தான் பொய் செல்வதாக கூறி வெளியே அனுப்பி விட்டதாகவும், இதனால் மனமுடைந்த தான் தூக்க மாத்திரை, பினாயில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு தன்னை கொண்டு வந்த போது, தான் நடிப்பதாக கூறி சிகிச்சை தர மறுத்ததாகவும், பின்னர் மாவட்ட எஸ்.பியை தொடர்பு கொண்டு தெரிவித்த பின்னர் தான் எல்லா நடவடிக்கையும் இருந்தாகவும், தன்னை போல பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் முன்வந்து சொல்ல தயக்கம் காட்டி வருவதாகவும், பெண்கள் மீது கை வைப்பதற்கு யோசிக்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்ட இளம் பெண்.




இப்பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் முரளியிடம் கேட்க அவருடை செல்போனை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் அப் செய்யப்பட்டு இருந்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது மருத்துவமனையில் வந்து சேர்ந்ததும் சிகிச்சையை தொடங்கி விட்டதாகவும், இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட பெண்  புகார் குறித்து விசாரணை நடத்தப்படும என்று தெரிவித்துள்ளனர்.