திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் சுவாச குழாயில் சிக்கிய தைல மருந்து டப்பா அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
சென்னை மேடவாக்கம் பகுதியில் வசிப்பவர் சோபன்பாபு. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமம், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு சோபன் பாபு குடும்பத்துடன் சாத்தனூருக்கு வந்திருந்தார்.
கடந்த 28-ந் தேதி இரவு அவரது 2 வயது மகள் ஹர்ஷினி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டில் கீழே இருந்த சிறிய தைல மருந்து டப்பாவை வாயில் வைத்து விளையாடியபோது எதிர்பாராமல் அந்த தைல மருந்து டப்பாவை சிறுமி விழுங்கியதில் தொண்டையில் சிக்கி கொண்டது. பின்னர் சிறுமிக்கு தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி அழுத்துள்ளார். இதையறிந்த பெற்றோர் சிறுமியின் தொண்டையில் சிக்கிய டப்பாவை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் வெளியே பெற்றோரால் எடுக்க முடியவில்லை. உடனடியாக ஹர்ஷினியை பெற்றோர் தானிப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் சிறுமியின் சுவாசம் மெல்ல மெல்ல குறைந்து உள்ளது. அதனைத்தொடர்ந்து ஹர்ஷினியை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி சுய நினைவு இல்லாமல் இருந்து உள்ளார். ஹர்ஷினி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உடனடியாக சிறுமியை அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையை தொடங்கினர். பின்னர் அறுவை சிகிச்சையின்றி சிறுமியின் சுவாச குழாயில் சிக்கியிருந்த தைல டப்பாவை எண்டோஸ்கோபி முறையில் வெளியே எடுத்தனர். டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுமி மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த சிறுமிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து பிழைக்க வைத்த மருத்துவர்களை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ''குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். சிறிய பொருட்கள், நாணயங்கள் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கக் கூடாது. அதனை குழந்தைகள் விழுங்கும் போது ஆபத்தில் முடிந்து விடும். மேலும் குழந்தையின் தொண்டையில் ஏதாவது பொருட்கள் சிக்கிக் கொண்டால் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்துவது உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்'' என்று தெரிவித்தார். அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய பொருளை எடுத்த மருத்துவர்களுக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.