பல்வேறு சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றியுள்ளார் மாற்றுத்திறனாளி வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் லோய்தர் கிராமத்தை சேர்ந்த இவர், தனது அசாத்திய பயணத்தில் உச்சத்தை தொட்டுள்ளார். வில்வித்தை விளையாட்டில் அசத்தி வரும் ஷீத்தல் தேவிக்கு விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான அர்ஜூன விருது இன்று வழங்கப்பட்டுள்ளது.


சவால்களை சாதனையாக மாற்றிய தங்க மகள்:


ஃபோகோமிலியா என்ற அரிய வகை நோயின் காரணமாக கைகளே இல்லாமல் பிறந்த ஷீத்தல் தேவி சிறு வயதில் இருந்தே பல சவால்களை சந்தித்துள்ளார். மன உறுதியால் தனது திறமைகளை வளர்த்து கொண்டு உயரம் தொட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, கிஷ்த்வார் மாவட்டத்தில் ராணுவ நடத்திய வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் விளையாட்டு உலகில் அறிமுகமானார்.


முன்னாள் வில்வித்தை வீரரான குல்தீப் வேத்வானின் வழிகாட்டுதலின் கீழ், தனது திறமைகளை மெருகேற்றினார் ஷீத்தல் தேவி. தனது கால்களை பயன்படுத்தி அம்புகளை ஏவும் தனித்துவமான நுட்பத்தின் மூலம் விளையாட்டு உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். புகழ்பெற்ற வில்வித்தை வீரரான மாட் ஸ்டட்ஸ்மேனும் இதே பாணியைதான் கையாண்டு வந்தார்.


ஷீத்தல் தேவியின் சாதனைகள்:


செக் குடியரசு நாட்டில் நடந்த உலக வில்வித்தை பாரா சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். கைகள் இன்றி, இந்த சாதனையை எட்டிய முதல் பெண் வில்வித்தை வீராங்கனை என்ற பெருமை ஷீத்தல் தேவியையே சாரும். இந்த வெற்றி அவரை புகழின் உச்சிக்கு மட்டும் கொண்டு செல்லவில்லை, பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.


ஆசிய பாரா கேம்ஸ் 2023 போட்டியிலும் அவரது சாதனை பயணம் தொடர்ந்தது. தனிநபர் பிரிவிலும் கலப்பு குழு பிரிவிலும் தங்கம் வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். விளையாட்டு உலகில் அவர் படைத்த தொடர் சாதனைகளின் காரணமாக பல விருதுகள் அளிக்கப்பட்டது.,ஆசிய பாராலிம்பிக் கமிட்டியால் ஆண்டின் சிறந்த இளைஞர் தடகள வீரராகவும், ஆண்டின் சிறந்த மகளிர் பாரா வில்வித்தை வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கடந்த 2023 ஆம் ஆண்டு, பெண்கள் காம்பவுண்ட் பாரா வில்வித்தை போட்டியின் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றார். ஷீத்தல் தேவியின் அசாத்திய பயணம் என்பது சாதனைகளை மட்டுமே கொண்டிருக்கவில்லை. பல தடைகளை உடைத்த அவர் பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.                                 


இதையும் படிக்க: Sports Awards:தமிழக வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் ஷமிக்கு அர்ஜுனா விருது - குடியரசு தலைவர் வழங்கி கவுரவித்தார்