MODI:  சாகசப் பயணி பியர் கிரில்ஸ் இந்திய  பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட பயண்ம் தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பயணம்:


பிரபல சாகசப் பயணியான பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி, கடந்த 2019ம் ஆண்டு இந்திய காடுகளில் மேன் Vs வைல்ட் எனும் சாகசப் பயணம் மேற்கொண்டார். அதுதொடர்பான வீடியோ ஒன்றை தற்போது, பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”மேன் வெர்சஸ் வைல்டு படத்திற்காக நான் இந்திய வனப்பகுதியில் பிரதமர் மோடியுடன் இருந்த காலத்தின் வேடிக்கையான கிளிப். டாய்லெட் நகைச்சுவை அனைவரையும் ஒன்றிணைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.






யானை சாணத்தை அறிமுகப்படுத்திய பியர் கிரில்ஸ்:


அந்த வீடியோவில், “பார்த்தீர்களா தற்போது தான் யானை ஒன்று கடந்து போனது என பியர் கிரில்ஸ் கேட்க, ஆமாம் என மோடி பதிலளிக்கிறார். உடனே, கீழே இருந்த காய்ந்த யானை சாணத்தை கையில் எடுக்கும் பியர் கிரில்ஸ் இதை நுகர்ந்து பாருங்கள் என மோடியிடம் கொண்டு செல்கிறார். அதை நுகர்ந்ததும் தற்போது உரமாகிவிட்டது அல்லவா என மோடி கேட்க, ஆமாம் அதோடு தற்போது இதை எரித்து கொசுக்களையும் விரட்டலாம் என பியர் கிரில்ஸ் கூறுகிறார். மேலும், எப்போது யானையின் சாணம் புதியதாக  இருக்கிறதோ அதாவது யானை சாணம் போட்ட உடனேயே பார்த்தால் அது மிகவும் ஈரமாக இருக்கும். அப்படி தான் நான் ஒருமுறை ஆப்ரிக்காவில் இருந்தபோது அந்த சாணத்தை பிழிந்து அதில் இருந்து கிடைத்த சாறை குடித்தேன். அது நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற சுத்தமான சாறு என பியர் கிரில்ஸ் விளக்கமளித்துள்ளார். இதை கேட்டதும் பிரதமர் மோடி மிகவும் ஆச்சரியத்துடன் கேட்டு வாய்விட்டு சிரித்துள்ளார்”. அப்போது, 2007ம் ஆண்டு பியர் கிரில்ஸ் யானை சாணத்தை பிழிந்து அதிலிருந்து வரும் சாற்றை பருகும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தபோது தான், ஜம்மு & காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. இதில் 40 பேர் உயிரிழந்த நிலையில், 35 பேர் காயமடைந்தனர். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் எல்லைக்கே சென்று தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி பதிலடி தந்தது குறிப்பிடத்தக்கது.