விழுப்புரம்: போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கிய உங்களுக்கு மெரினாவில் சிலை வைக்கப்படுமென நூதன முறையில் பதாகை ஏந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்கள் பஞ்சப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பன 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் மூன்று பணிமனைகளில் 288 அரசு பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று பணிமனைகளில் 800 பேர் பணி புரிந்து வருகின்ற நிலையில் 600 பணியாளர்கள் தற்போது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராம புறங்களுக்கு இயக்கப்படும் 50 பேருந்துகளில் 35 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராம புறங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் கிராம புறங்களிலிருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பேருந்துகளில் அதிகளவு பயணிகள் பயணிக்ககூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்தில் குறைந்த அளவே பயணிகளே காணபடுகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கிய உங்களுக்கு மெரினாவில் சிலை வைக்கப்படுமென நூதன முறையில் பதாகை ஏந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போக்குவரத்து பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பேருந்து நிலைய வாயிலில் பேருந்துகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டவர்களை போலீசார் அப்புறத்தி அமைதியான முறையில் எதிர்ப்பினை தெரிவிக்க வலியுறுத்தியதை தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தினை கைவிட்டு சென்றனர். மேலும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதால் பணிக்கு வராமல் உள்ளவர்களை பணிக்கு வந்தால் தங்களின் மீதுள்ள மெமோக்கள் ரத்து செய்யப்படுமென கூறி அதிகாரிகள் பணிக்கு அழைப்பதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.