சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வீராங்கனைகளில் ஒருவர் செரீனா வில்லியம்ஸ். வில்லியம்ஸ் சகோதரிகள் என்றால் மகளிர் டென்னிஸ் உலகில் மிகப்பெரிய மரியாதை உண்டு. இவர்கள் முக்கியமானவர் செரீனா வில்லியம்ஸ். இவர் 1999ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் வெளிச்சம் பெற தொடங்கினார். 


இந்நிலையில் அவர் தற்போது சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். வரும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருடன் செரீனா வில்லியம்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் டென்னிஸை தவிர பிற விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.


 






இது தொடர்பாக செரீனா வில்லியம்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், “இது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று. இருப்பினும் இது நிச்சயம் நடந்து தான் ஆகவேண்டும். அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை நான் முடிவு செய்துவிட்டேன். ஆகவே அதற்கு நான் தயாராகி விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.


டென்னிஸ் விளையாட்டில் செரீனா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக இவர் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.  அத்துடன் 14 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 2 கலப்பு இரட்டையர் பிரிவிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். 


 






இவை தவிர மகளிர் டபிள்யூடிஏ 73 ஒற்றையர் பட்டங்களையும், 23 இரட்டையர் பிரிவு பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார். இவற்றுடன் சேர்ந்து 4 ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்றுள்ளார். இவருடைய நீண்ட நெடிய டென்னிஸ் வாழ்க்கையில் 319 வாரங்கள் சர்வதேச வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தில் இருந்து சாதனைப் படைத்தார். 


செரீனா வில்லியம்ஸ் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் இவர் எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை.  கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இவர் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இந்தச் சூழலில் கடைசியாக யுஎஸ் ஓபன் தொடரில் பங்கேற்க உள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண