கரூர் மாவட்டம் குளித்தலை தொப்பமடை பகுதியில் அகழாய்வு நடத்த உத்தரவிட கோரிய வழக்கில்,

மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் அச்சாணி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார், மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்டம் குளித்தலை தொப்பமட்டை பகுதியில் கி.மு.5ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கல் வட்டங்கள் காணப்படுவதாகவும், குளித்தலை தொப்பமடை கிராமத்தில் இதுபோன்ற 10 கல் வட்டங்கள் அப்படியே உள்ளன என்றும், செய்திகள் வெளியாகின. இதேபோல சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி நவனி கண்மாய் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் வட்டங்கள் காணப்படுகின்றன. 

 

இந்த கல் வட்டங்கள் முற்றிலும் வித்தியாசமானவை. ஆதிச்சநல்லூர், கீழடி போல கீழச்சிவல்பட்டியிலும் அகழாய்வு நடத்தினால், தமிழர்களின் வரலாறு கிடைக்கும். எனவே கரூர் மாவட்டம் தொப்பமடை, சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி ஆகிய பகுதியில் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்"என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய  உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

 



மற்றொரு வழக்கு


தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் தீர்மானமின்றி கடன் வழங்க மறுத்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ரத்து செய்யக்கோரி வழக்கில், கூட்டுறவு சங்கத்தின் பரிந்துரையின்றி, கடன் தொகையை மத்திய வங்கியால் நேரடியாக அனுமதிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.


ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே செய்யாமங்கலத்தைச் சேர்ந்த வரதராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:


புதுக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக கடந்த 2018ல் தேர்வு செய்யப்பட்டேன். தனது விவசாய நிலத்தில் போர்வெல் கிணறு அமைப்பதற்காக. ஒருவர்  ரூ.4 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், நிர்வாகம் தரப்பில், அவருக்கு கடன் வழங்க ரூ.2.24 லட்சம் மட்டுமே தர முடியும் என அறிவுறுத்தப்பட்டது. சந்தேகங்கள் சரி செய்யப்படாத நிலையில், அவரது விண்ணப்பம் நிலுவையில் இருந்தது. இதை மறைத்து அவர் மத்திய வங்கிக்கு நேரடியாக புதிதாக விண்ணப்பித்துள்ளார். அவருக்கு ரூ.4 லட்சம் கடன் தருமாறு வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. சங்கத்தின் தீர்மானமின்றி கடன் வழங்க கூறினர். இதற்கு நான் ஒத்துழைக்காததால் என்னை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:


கடன்தாரருக்கான கடன் பணம் மத்திய வங்கி மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு அரசின் மானியமும் உண்டு. இதில், சங்கத்திற்கு எந்த பொறுப்பும் இல்லாமல் இல்லை. கடன் தொகை வசூலிக்க வேண்டிய பொறுப்பு சங்கத்திற்கு உண்டு. இதனால் ஏற்படும் சுமையை சம்பந்தப்பட்ட சங்கம்தான் சுமக்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் பரிந்துரையின்றி, கடன் தொகையை மத்திய வங்கியால் நேரடியாக அனுமதிக்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, சங்கத்தின் தீர்மானமின்றி மத்திய வங்கியில் இருந்து இயந்திரத்தனமாக நேரடியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியால் அனுமதிக்கப்பட்டவருக்கு கடன் வழங்க மறுத்ததாகக் கூறி மனுதாரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் நலன் கருதியே மனுதாரர் மறுத்துள்ளார். எனவே, மனுதாரரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண