பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1861-ம் ஆண்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ குருக்களால் புனித சூசையப்பர் தேவாலயம் கட்டப்பட்டது. சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த தேவாலயம் 8,800 சதுர பரப்பளவில் கட்டப்பட்டது. அப்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேவாலயம் கட்டப்பட்டது. கும்பகோணம் மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இந்த தேவாலயம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பழமையான இந்த தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் தான் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மட்டுமின்றி, துறையூர் பகுதி தேவாலயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய பழமை வாய்ந்த தேவாலயத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அதன் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த தேவாலயம் மூடப்பட்டு, அதற்கு சொந்தமான பள்ளியிலும், மண்டபத்திலும் பிரார்த்தனை நடைபெற்று வந்தது. பின்னர் அந்த தேவாலயம் அருகே கடந்த 2016-ம் ஆண்டு புதிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்பு சிலை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பழைய தேவாலயம் சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேவாலயத்திற்கு சொந்தமான பள்ளியை ஆய்வு செய்ய வந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், புதிய தேவாலயம் பயன்பாட்டில் இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள், மக்கள் நலன் கருதியும் பழைய தேவாலயத்தை இடித்து அப்புறப்படுத்த தேவாலய பங்குத்தந்தையை அறிவுறுத்தினர். இதையடுத்து பங்குத்தந்தை உத்தரவின்பேரில் 161 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும் போது, இந்த தேவாலயத்தை என்னால் மறக்க முடியாது. எனது தாத்தா முதல் மகன் வரை நான்கு தலைமுறைகளுக்கு பெயர் சூட்டும் விழா இங்குதான் நடந்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு ஞானஸ்தானம் இந்த தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் எங்கள் நேரத்தை அதிகம் தேவாலயத்தில் செலவழித்துள்ளோம். தேவாலயம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதை இடிப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்த தேவாலயத்தை பொருத்தமட்டில் எங்கள் நினைவில் என்றும் இருக்கும் என்றார். மேலும் இந்த தேவாலயம் நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. இதனை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால் செய்ய முடியவில்லை. இது எங்களுக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு ஆகும் என்றார். மேலும் தேவாலயம் என்பது எங்களுடன் இணைந்து இருப்பது தினந்தோறும் காலையில் எங்கள் குடும்பத்துடன் தேவாலயம் சென்று தேவனை தரிசித்தால் எங்களது குடும்பத்தில் எந்த விதமான ஒரு சிக்கலும் இல்லாமல் மன நிம்மதியுடன் வாழ்வோம் ,என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. மேலும் எனது தந்தை, தாயுடன் இந்த தேவாலயத்திற்கு சிறுவயதில் இருந்து சென்று உள்ளேன், அங்கு சென்று வரும் போதெல்லாம் மனதுக்குள் ஏதோ ஒரு புத்துணர்ச்சியும் புதிய நம்பிக்கையும் தோன்றும். இதனைத் தொடர்ந்து எனது குடும்பத்தையும் தினந்தோறும் அங்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தேன். பின்பு நாளடைவில் தேவாலயம் கட்டிடம் பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு செல்வது குறைந்தது. தற்போது தேவாலயம் இடிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்