கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, டி-20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாக கேப்டன் கோலி அறிவிப்பு வெளியிட்டு கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கோலியின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வெவ்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலக இருப்பதாக கோலி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனால், கோலி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. 


அந்த வரிசையில், தனியார் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றின் செய்தியின்படி, நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியதை அடுத்து, இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இருவர் கோலி மீது புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்ய தவறியதால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இது குறித்து, கோலியும் அதிருப்தி தெரிவித்திருந்தது கிரிக்கெட் உலகில் பேசு பொருளானது. 


”எதிரணியின் பெளலர்கள்மீது அழுத்தம்போட தவறினால், அவர்கள் தொடர்ந்து சவாலான முறையில் பந்துவீசுவார்கள். களத்தில் ரன் சேர்க்க வேண்டும், எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்பதை திட்டமிட்டிருக்க வேண்டும்.” என கடுகடுத்து கொண்டார்.



போட்டி முடிந்து வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூம் வந்தபோது, புஜாரா, ரஹானே போன்ற வீரர்கள்மீது விராட் கோலி அதிருப்தி தெரிவித்ததாகவும், அதனால் அணி வீரர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும் அந்த பத்திரிக்கை செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்த பிறகு, இரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் பிசிசிஐ செயலாளர் ஜே ஷாவை தொடர்பு கொண்டு, கோலி நடந்து கொண்ட முறையைப் பற்றி புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், மற்ற வீரர்களின் கருத்துகளையும் கேட்டு, அதன் பிறகு நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிசிசிஐ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இந்நிலையில், “அதிக பணிச்சுமை” என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று ஃபார்மேட்களிலும் கேப்டனாக இருக்கும் கோலி, டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளது பல கேள்விகளை முன்வைக்கிறது. அக்டோபர் மாதம் துபாயில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதன் மூலம் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியும் என கோலி தெரிவித்துள்ளார்.


மேலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக கோலி தொடர்வரா இல்லை என்பது பற்றி டி-20 உலகக்கோப்பைக்கு பிறகு பிசிசிஐ பரிசீலனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.