இந்தியாவின் அதிரடி நாயகனாக திகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் படு பிஸியாக செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்டாலும் கிரிக்கெட்டை தொடர்ந்து உற்று நோக்கி தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை அவர் வழக்கமாக கொண்டு உள்ளார்.


கிரிக்கெட் மட்டுமின்றி, பொதுவான விசயங்கள், அரசியல் மற்றும் இதர நகைச்சுவையான விசயங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் சேவாக் பதிவிட்டு அன்றைய நாளின் வைரல் டாப்பிக்காக மாறிவிடுவார். அந்த வகையில், தான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சேவாக் செய்து உள்ள  சம்பவத்துக்கு ஒரு தரப்பு ஆதரவையும், மற்றொரு தரப்பு எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறது. காரணம் அவர் வெளியிட்ட படம் அப்படி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிக தாடியுடன் செல்போனை  வைத்த படி அமர்ந்திருக்கும் தரமற்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் “நீங்கள் அழுவதை நிறுத்துங்கள்” என எழுத்தப்பட்டு உள்ளது.






”அதிகம் திரும்பும் பிட்சுகளில் மட்டுமே இந்தியா வெற்றிபெறும் என்று சொன்னவர்களுக்கு இந்திய அணி இதை பதிலாக சொல்லும்” என அவர் அந்த படத்துடன் விளக்கம் கொடுத்து உள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள், வீடியோக்கள் பல ஆண்டுகளாக மீம்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல மீம் பக்கங்கள், யூடியூப் சேனல்கள் பிரதமர் மோடியை விமர்சித்து மீம் வெளியிட்டும், மோடியின் படத்தை பயன்படுத்தி மீம்களை தயாரித்தும் பதிவிட்டு மில்லியன் லைக்குகளை வாரிக் குவித்து இருக்கின்றனர்.


ஆனால், உலகம் அறிந்த கிரிக்கெட் பிரபலமான சேவாக், ஒரு பிரதமர் என்றும் பாராமல் மோடியின் படத்தை மீம் வெளியிட பயன்படுத்தலாமா? என்று பாஜக அனுதாபிகள் அவரது பதிவுக்கு கீழே வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பில் கிரிக்கெட் ரசிகர்கள், விராட் கோலி ஆதரவாளர்களோ, சேவாக்கின் இந்த பதிவை அதிகளவில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்த்து டிரெண்ட் செய்து வருகின்றனர். அவர்களுடன் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும், ஐடி விங்குகளும் சேவாக்கின் இப்பதிவை மோடிக்கு எதிரான பதிவாகவே கருதி பகிரத் தொடங்கி இருக்கின்றனர்.


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், டார்ட்ஸில் நடைபெற்ற 2 வது போட்டியில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவவே, கேப்டன் கோலிக்கு எதிராகவும், தொடர்ந்து சொதப்பி வரும் துணைக் கேப்டன் ரஹானேவுக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.



இந்த நிலையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்படாததால் கோலி மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. முதல் இன்னிங்சில் இந்தியா சொதப்பியதை வைத்து, தட்டையான பிட்சுகளில் இந்தியா வீரர்களுக்கு விளையாட தெரியாது என பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால், 2-வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் உயிரை கொடுத்து விளையாடி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுவிட்டனர். இந்த நிலையில், விமர்சகர்களை பிரதமர் மோடியின் படத்தை பகிர்த்து கலாய்த்து இருக்கிறார் சேவாக்.