மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் உள்ள செங்கமல யானையை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் ஆய்வு.

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் தனியாரிடம் உள்ள யானைகளின் உடல் நிலை, மற்றும் யானைகள் பராமரிக்கப்படும் நிலை குறித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்பேரில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள யானைகள் மற்றும் தனியாரிடம் உள்ள யானைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்திற்கு வனவிலங்கு குழு உறுப்பினரும், யானைகள் ஆராய்ச்சியாளருமான சிவகணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் யானைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார்.



 

அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலிலுள்ள செங்கமலம் என்ற பெண் யானையை மாநில வன விலங்கு குழு உறுப்பினரும், மாநில யானைகள் ஆராய்ச்சியாளருமான டாக்டர் சிவகணேசன் யானையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். யானை 5 நிமிடத்திற்கு ஒருமுறை உட்கொள்ளும் அளவு, பாகன் சொல்வதை புரிந்து கொள்ளும் திறன், யானையின் கண், காது, கால், போன்றவற்றின் நிலை, ஆரோக்கியம், யானை தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பரப்பளவு போன்றவை குறித்து ஆய்வு செய்து யானையின் விபரங்கள் குறித்து யானை பாகன் ராஜகோபாலனிடம் விசாரித்தார். ஆய்வின்போது கோயில் செயல் அலுவலர் சங்கீதா, கோயில் மேலாளர் நாகம்மாள் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

மேலும் மாநில வனவிலங்கு குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன் கூறுகையில், யானையின் ஆரோக்கியம் என்ன வகையான உணவுகள் வழங்கப்படுகிறது, யானையின் எடை மற்றும் உடல் கூறுகள் எவ்வாறு உள்ளது, யானைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கோயில்கள் மற்றும் அதன் வளாக பகுதிகளில் யானையை வைத்துக் கொள்ளக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் நந்தவனம் ஒன்றை உருவாக்கி அங்கே யானைக்கு தேவையான தங்குமிடம், புதிய நீர் தொட்டி, யானைகள் உண்ணக்கூடிய புல்வகைகளை அங்கு உற்பத்தி செய்ய வேண்டும்.



நாளொன்றுக்கு யானைகள் குறைந்தபட்சம் 15 கிலோமீட்டர் நடக்க வேண்டும், எனவே அதற்குரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். யானை பாகன் மற்றும் உதவி பாகன் ஆகியோர் யானைகள் இருக்கும் இடத்தில் தங்க வசதி செய்து தரவேண்டும். யானைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிற வகையில்  அந்த இடம் அமைய வேண்டும், இவை அனைத்தும் அரசு வழிகாட்டு நெறிகள் கூறியுள்ளது. மேற்கண்ட வசதிகள் ஒவ்வொரு கோயில்களிலும் உள்ளதா என்பது குறித்து அந்தந்த கோவில்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அது குறித்து ஆய்வறிக்கையை, இந்து சமய அறநிலையத் துறைக்கு சமர்ப்பிக்கப்படும் என மாநில வனவிலங்கு குழு உறுப்பினரும் யானைகள் ஆராய்ச்சியாளருமான சிவகணேசன் தெரிவித்தார்.