ஹரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஹரியானா மாநில அரசு செப்டம்பர் 6 அன்று, 12.30 மணி முதல் இணைய வசதிகள் தடைசெய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


ஹரியானா மாநில உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், கர்னால் மாவட்டத்தில் செல்போன் இணைய வசதிகள் தற்காலிகமாகத் தடை செய்யப்படுவதோடு, அந்தத் தடை செப்டம்பர் 6 அன்று 12.30 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 7 அன்று நள்ளிரவு 12 மணி வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, கிஸான் மஹாபஞ்சாயத் என்று அழைக்கப்படும் விவசாயிகளின் போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவில் பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும், கர்னால் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலையும் வாய்ப்பும் இருப்பதாகவும், இணைய வசதியைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களிலும், எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட தகவல் அனுப்பும் வசதிகளாலும் தவறான தகவல்களையும், வதந்திகளையும்  பரப்பும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



ஹரியானாவின் சட்ட ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் டிஜிபி நவ்தீப் சிங் விர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்ததையடுத்து, அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். ``இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம், பொது அமைதியையும், ஒழுங்கையும் பாதுகாப்பது, எந்த வகையிலான வன்முறையையும் நிகழ விடாமல் தடுப்பது, சாலையில் மக்களும் வாகனங்களும் இயல்பாக நடமாட வழிவகை செய்வது, பொதுச் சொத்துகளைச் சேதம் செய்யாமல் பாதுகாப்பது ஆகியவற்றிற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மாநிலம் முழுவதும் பணிகள் நடைபெற்றாலும், கர்னால் மாவட்டத்தில் கூடுதலாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.


ஹரியானா காவல்துறையினர் எச்சரிக்கையாக இருப்பதாகவும், எதிர்பாராத சம்பவங்களில் இருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகக் கூறியுள்ள அவர், “பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி, இங்குள்ள மாநகராட்சியுடன் இணைந்து சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார் நவ்தீப் சிங். 



மாநில காவல்துறை, துணை ராணுவம் என கர்னால் மாவட்டத்தில் காவல்துறை இதுவரை 40 படைகளைக் குவித்துள்ளது. 


சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பாக, மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராகவும், கடந்த ஆகஸ்ட் 28 அன்று போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறும் முக்கிய கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், விவசாயிகள் கர்னால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மினி சட்டமன்றத்தைத் தொடர்ந்து முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.