இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அடுத்த மாதம் முதல் நான்கு டெஸ்ட் பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டி நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இம்முறை மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி கொண்டிருக்கும் சர்பராஸ் கான் அணியில் இடம் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.


இந்தநிலையில் சர்பராஸ் கான் தனது மட்டையால் தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இன்று டெல்லிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் பேட்டிங் செய்த சர்பராஸ் அபார சதம் அடித்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவுக்கு பதிலடியையும் கொடுத்துள்ளார். 






டெல்லிக்கு எதிரான சதம்:


டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஹிம்மத் சிங், ரஹானே தலைமையிலான மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அப்போது மும்பை அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், கேப்டன் அஜிங்க்யா ரஹானே 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். மும்பை அணி 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. சர்ஃபராஸ் 155 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் எடுத்தார். முன்னதாக, தமிழ்நாட்டுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 165 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கு எதிராக 126 ரன்கள் எடுத்தார். கடந்த ஐந்து முதல் தரப் போட்டிகளில் சர்பராஸ் கானின் மூன்றாவது சதம் இதுவாகும்.






முதல் தர போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் அதிக சராசரியுடன் சர்பராஸ் கான் இரண்டாவது இடத்திலும், பிராட்மேன் முதலிடத்தில் உள்ளனர். 


டான் பிராட்மேன்: 


டான் பிராட்மேன் 338 இன்னிங்ஸ் விளையாடி 28,067 ரன்களுடன் 95.14 சராசரி வைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மும்பை வீரர் சர்பராஸ் கான் 53 இன்னிங்ஸில் 3505 ரன்களுடன் 81.52 சராசரியை வைத்துள்ளார்.  






80+ சராசரியாக டீம் இந்தியாவில் மீண்டும் இடம் கிடைக்கவில்லை:


சர்பராஸ் கான் இதுவரை 37 முதல் தர போட்டிகளில் 53 இன்னிங்ஸ்களில் 3400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இங்கு அவரது பேட்டிங்கில் 82.86 சராசரியுடன் மொத்தம் 13 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். இதில், ஒரு டிரிபிள் சதமும் அடங்கும்.  இவ்வளவு அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகும், சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. முதல் தர கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் தொடர்ந்து பேட் அடித்து வருகிறார். அவர் தேர்வு செய்யப்படாததால், கிரிக்கெட் வல்லுநர்கள் உட்பட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.