தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது. இதில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுகதா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் அடுத்த சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.
வாத்தி திரைப்படம்:
நடிகர் தனுஷ் முதன் முதலில் டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் வாத்தி. இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ‘படிப்பு பிரசாதம் மாதிரி..குடுக்கனும்…5ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி அத விற்கக் கூடாது’ என நடிகர் தனுஷ் பேசும் பஞ்ச் வசனம் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. வாத்தி படத்திற்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்ற வா வாத்தி பாடல்:
வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ள வா வாத்தி பாடல்தான், இப்படத்தின் முதல் சிங்கிளாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி வெளியானது. நடிகர் தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மேனன் பாடியிருந்தார். ஜிவியின் மனதை மயக்கும் இசையில் இடம் பெற்றிருந்த இப்பாடல், பெரும் வைரலாகி ஒரு தலையாக காதல் செய்யும் பெண்களின் ரிங்டோன் ஆகவே மாறிவிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது நாடாேடி மன்னன் பாடலும் வெளியாகியுள்ளது.
நாடோடி மன்னன்..
வாத்தி படத்தின் இரண்டாவது சிங்கிளான நாடோடி மன்னன் பாடல் குறித்த அப்டேட்டினை படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘பொங்கல் ஸ்பெஷலாக வாத்தி படத்தின் அடுத்த சிங்கிள் வெளியாகும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த பாடல் வெளியாகியுள்ளது.
நாடோடி மன்னன்..என தொடங்கும் இந்த பாடல், அசல் கிராமத்து சாயலை ரசிகர்களுக்கு ஊட்டும் வகையில் உருவாகியுள்ளது. இந்த பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். இதற்கு முன்னர் தனுஷ் நடித்து வெளியான அசுரன் படத்தில் இடம் பெற்றிருந்த கத்தரி பூவழகி பாடலையும் இவரே பாடியிருந்தார். இதனால், நாடோடி மன்னன் பாடலிலும் கத்தரி பூவழகி பாடலின் சாயல் படர்ந்திருப்பதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செகண்ட் சிங்கிளில் இடம் பெற்றுள்ள ஜீவி..
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார், இந்த பாடலில் இடம் பெற்றுள்ளார். இதில், பாடல் பாடிக்கொண்டு டெம்போவில் பயணிக்கும் பாடகர் ஆண்டனி தாசனிடம் லிஃப்ட் கேட்டு ஏறும் இளைஞராக ஜி வி பிரகாஷ் குமார் இடம் பெற்றுள்ளனர். வழக்கமாகவே ஜிவியின் பாடல் என்றால் ஏதாவது புதிதாக இருக்கும் என துள்ளி குதிக்கும் ரசிகரகள், அவரையே இந்த பாடலில் பார்த்தவுடன் சர்ப்ரைஸ் ஆகியுள்ளனர்.
தனுஷ் ட்வீட்..
நாடோடின மன்னன் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இது குறித்து நடிகர் தனுஷ் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தெலுங்கு மொழி பாடலின் லிங்கையும் இணைத்துள்ளார். தெலுங்கில் இப்பாடலுக்கு ‘பஞ்சரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரிலீஸ் எப்போது?
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படம், அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் என பைலிங்குவலாக உருவாகி வரும் படம் என்பதால், மக்களை இந்த படம் ஏமாற்றாது என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உள்ளது.