ஜோஷிமத் நகரத்தில் நிலச் சரிவு ஏற்படுவது குறித்து மத்திய அரசுக்கு முன்னரே தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.


உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் மண் பெயர்ந்து வருவதால் கட்டிடங்களில் தொடர் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் பீதியின் உச்சத்தில் உள்ளனர். ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவுக்கு பெயர் போன ஜோஷிமத் நகரத்தில் இருந்து அரசு நிர்வாகம் மக்களை வெளியேற்றி வருகிறது.


புதையும் நகரம்


முன்னதாக இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்தாண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு தற்போது நிலத்தில் மண் புதைந்து வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மத்திய ஜோஷிமத் நகரில் ராணுவ ஹெலிபேட் மற்றும் கோயில் அமைந்துள்ள பகுதியில் திடீரென மண் பெயர்ந்தது.


2,180 மீட்டர் உயரத்தில் உள்ள ஜோஷிமத்-அவுலி சாலை அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. முந்தைய மாதங்களை காட்டிலும் புதைவின் விகிதம் தற்போது குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஜோஷிமத் நகரம் 9 செ.மீ அளவுக்கு புதைந்துள்ளது.


ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 7 மாத காலத்தில், ஜோஷிமத் நகரின் பகுதிகள் 9 செ.மீ வரை நிலச்சரிவை பதிவு செய்துள்ளது. கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோளில் இருந்து இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது.


ஜனவரி 12ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டது. ஊடகங்களில் தகவல் வெளியானதை அடுத்து, அதிர்வலைகளை உருவாக்கியது. ஜோஷிமத் குறித்த தகவல்கள் ஊடகத்திடம் பேசவும் சமூக வலைதளத்தில் தகவல்களை பகிரவும் அரசு நிறுவனங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தடை விதித்துள்ளது.


மிகவும் அபாயகரமானது


இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (ஜன.17) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ’’நிலச் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன்? இது மிகவும் அபாயகரமானது. ஜோஷிமத் மக்கள் இந்த இயற்கைப் பேரிடருக்குக் காரணம் அல்ல. மக்களைப் பாதுகாக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 


ஏற்கெனவே நிலச் சரிவு குறித்த கணிப்புகள் வெளியான நிலையில், அரசு உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுதான் அரசின் கடமை. மேற்கு வங்கத்தில் பாஸ்சிம் பர்த்வான் மாவட்டமும் ஜோஷிமத்தைப் போலவே நிலச் சரிவைச் சந்திக்கும் அபாயத்தை எதிர்கொள்ள உள்ளது’’ என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


நிலச் சரிவுக்கு என்ன காரணங்கள்..?


ஜோஷிமத் நகரம் தானாக புதைவதற்கான காரணம் குறித்து வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சான் பேசும்போது, "ஜோஷிமத் பாதிப்புக்கு உள்ளாவதற்கு மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன. நூற்றாண்டுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிலச்சரிவின் இடிபாடுகளின் மீது உருவாக்கப்பட்டது ஒரு காரணம்.


பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்திருப்பது இரண்டாவது காரணம். காலநிலை மாற்றம், காலபோக்கில் நிலத்தடியின் கீழ் பாயும் நீரால் கற்களின் பலம் குறைந்தது மூன்றாவது காரணம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.