சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போனவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மன்ஞ்ரேக்கர். ரவீந்திர ஜடேஜா ஒரு முழுமையான வீரர் இல்லை என அவர் தெரிவித்த கருத்து பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு சில நாட்களாக இவர் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடாமல் அமைதி காத்து வந்தார், இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இந்த முறை அவர் வம்பு இழுத்திருக்கும் வீரர் தான் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.


ரவிச்சந்திரன் அஸ்வினை ஆல் டைம் சிறந்த வீரர் என குறிப்பிட முடியாது என சஞ்சய் மன்ஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினை பொறுத்தவரை வெளிநாடுகளில் நிரூபிக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்துள்ளார். சஞ்சய் மன்ஞ்ரேக்கர் தெரிவிக்கையில் "தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளி நாடுகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அவர்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சிரமமாக இருக்கும், அது போன்ற நிலைகளில் அஸ்வின் தன்னை நிரூபிக்க வேண்டும்" என்றுள்ளார்.



மேலும் "அஸ்வின் ஒரு சிறந்த வீரர் என்பதை ஏற்கிறேன், ஆனால் அவரை அணைத்து காலத்திற்குமான சிறந்த வீரர் என சொல்லுவதில் தான் எனக்கு பிரச்னை" என்று சஞ்சய் மன்ஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.


மேலும் அறிய :இந்தியாவின் நம்பிக்கை நாயகன் - அஜிங்கியா ரஹானே!


குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதுவரை ஒரு 5 விக்கெட் ஹால் கூட எடுக்கவில்லை என்பதை சஞ்சய் மஞ்ரேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார். "ஒரு முறை கூட அஸ்வினால் இந்நாடுகளில் ஐந்து விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்.



சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் மட்டுமே அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவதாகவும் சஞ்சய் மஞ்ரேக்கர் குறிப்பிட்டுள்ளார். "கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நாம் பார்த்தால் சுழற்பந்து வீச்சு எடுபடும் ஆடுகளங்களில் அஸ்வின் நன்றாக விக்கெட்களை வீழ்த்தியுள்ளார், ஆனால் அவருக்கு இணையாக ரவீந்திர ஜடேஜாவும் விக்கெட்களை வீழ்த்துகிறார்" என சுட்டிக்காட்டியுள்ள சஞ்சய் மன்ஞ்ரேக்கர் அஸ்வின் மட்டும் நம்பர் 1 இல்லை என தெரிவித்துள்ளார்.


மேலும் இறுதியாக இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற தொடரின் போது சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் அஸ்வினை விட அக்சர் பட்டேல் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் எனவும் சஞ்சய் மன்ஞ்ரேக்கர் குறிப்பிட்டுள்ளார்.





இப்படி பல்வேறு காரணங்களை குறிப்பிட்டுள்ள சஞ்சய், அஸ்வின் நல்ல பந்துவீச்சாளர் தான், ஆனால் "ஆல் டைம் கிரேட்" இல்லை என தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 4-வது சிறந்த பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (409 விக்கெட் - 78 போட்டி), ஐசிசி உலக தரவரிசையில் 2வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி சஞ்சய் மன்ஞ்ரேக்கர் பதிலடி கொடுப்பாரா அஸ்வின் என பொறுத்திருந்து பார்ப்போம்.