ஜூலை 2019 முதல் ஜூன் 2021 வரையிலான கால கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இரண்டு அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் களமிறங்குகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி 17 போட்டிகளில் 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று முதல் இடத்திலும், நியூசிலாந்து அணி 11 போட்டிகளில் விளையாடி 7 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளன.


சரி அணிகளில் இந்தியாவும், நியூசிலாந்தும் பெஸ்ட், வீரர்களில் யார் ?


நம்மில் பலர் விராட் கோஹ்லி, கேன் வில்லியம்சன் என நினைப்போம், ஆனால் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் இடையே பெஸ்ட் வீரர் என்றால் இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தான். ஆச்சிரியமாக இருக்கலாம், ஆனால் ரஹானே தான் இந்தியாவின் மிஸ்டர் நம்பிக்கையாக திகழ்ந்துள்ளார்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கால கட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் அஜிங்கியா ரஹானே 28 இன்னிங்ஸில் விளையாடி 1095 ரன்களை விளாசியுள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணி வீரர்களையும் ஒப்பிடும் போது இதுவே அதிகபட்சமாகும். 3 சதம், 6 அரைசதம் என 43.80 சராசரியுடன் இந்த கால கட்டத்தில் ரஹானே விளையாடியுள்ளார்.



ஆஸ்திரேலியா அணி - 112 (2வது டெஸ்ட் போட்டி)


விராட் கோஹ்லி இல்லாத நிலையில், அணியின் கேப்டன் பொறுப்பை தொடருக்கு நடுவே ஏற்றிருந்தார் அஜிங்கியா ரஹானே. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என்ற நிலையில் 2வது போட்டியில் களமிறங்கியது. முதல் டெஸ்டில் 36 ரன்களில் ஆல் அவுட் ஆன பிறகு நடைபெறும் டெஸ்ட் போட்டி வேறு. மீண்டும் ஒருமுறை அணியை மீட்டெடுத்தார் ரஹானே. 61/2 என்ற நிலையில் கிரீஸ் வந்த ரஹானே 112 ரன்களை விளாசினார். 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பின்னர் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி. சமீப காலத்தில் இந்திய அணி வீரர் ரஹானே ஆடிய மிக சிறந்த இன்னிங்ஸ் இதுவாகும்.


தென்னாப்பிரிக்கா அணி - 115 (3வது டெஸ்ட் போட்டி)


ரோஹித் ஷர்மா 212 ரன்கள் விளாச அவர் பக்கம் அனைத்து கவனமும் திரும்பியது, ஆனால் அந்த போட்டியில் 115 ரன்களை சத்தமில்லாமல் அடித்திருந்தார் ரஹானே. இறுதியில் இந்தியா இன்னிங்ஸ் பிளஸ் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



மேற்கிந்திய தீவுகள் அணி - 102 (முதல் டெஸ்ட் போட்டி)


முதல் இன்னிங்சில் 297 ரன்களில் இந்தியா சுருள, அதில் 81 ரன்களை அடித்திருந்தார் ரஹானே. அடுத்து பேட்டிங் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 222 ரன்களை அடித்தது. குறைந்த லீட் மட்டுமே இந்திய அணிக்கு இருந்த நிலையில், 2வது இன்னிங்சில் 102 ரன்களை அடித்து இந்தியாவை வலுவான நிலைக்கு எடுத்து சென்றார் ரஹானே. 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது இந்தியா.


இது அனைத்துமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு வர முக்கியமான காரணங்கள். இது போன்று இந்திய அணி வீரர் ரஹானே எதிரணிக்கு ஒரு சைலன்ட் வில்லனாக செயல்பட்டு வருகிறார்.


ரஹானே இங்கிலாந்தில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 552 ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில் ஜூன் 18ம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.