உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18-ந் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இங்கிலாந்து நாட்டின் சவுதாம்படன் நகரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்து அணியினருடன் டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றனர். புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 378 ரன்களை குவித்தது.


அந்த அணியில் அறிமுக வீரராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவான் கான்வே முதல் போட்டியிலே இரட்டைச் சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். நியூசிலாந்து அணியில் கான்வே அறிமுகப்படுத்தப்பட்டது போல, இங்கிலாந்து அணியில் அறிமுக பந்துவீச்சாளராக ஒல்லி ராபின்சன் என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.




முன்னணி பந்துவீச்சாளர்களை போல, தனது பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் பவுன்சர்களை மாறி, மாறி வீசி நியூசிலாந்து வீரர்களுக்கு குடைச்சல் கொடுத்தார். அவரது சிறப்பான் லைன் மற்றும் லென்த் பந்துவீச்சால் முதல் இன்னிங்சிலே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


அவரது பந்துவீச்சை புகழ்ந்த கிரிக்கெட் வல்லுனர்களும், ரசிகர்களும் நிச்சயம் இங்கிலாந்து கிரிக்கெட்டின் வருங்கால பந்துவீச்சு நட்சத்திரமாக ராபின்சன் வலம் வருவார் என்று புகழ்ந்தனர். இந்த நிலையில், அவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவிட்டிருந்த டுவிட் அவருக்கே எமனாக அமைந்துள்ளது.


ராபின்சன் தனது 19வது வயதில், தனது டுவிட்டர் பக்கத்தில் இன வெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாகவும் பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளார். நேற்று அவர் சிறப்பாக பந்துவீசியதைத் தொடர்ந்து அவரைப் பற்றி தேடிய ரசிகர்கள் அவர் இந்த செயலில் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


இதையடுத்து, அவரது டுவிட்டிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலுவான கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்தான் இதை பதிவு செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.




இதுதொடர்பாக, ராபின்சன் அளித்த விளக்கத்தில், என் வாழ்வில் மிகப்பெரிய நாளில் நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இனம் மற்றும பாலியல் ரீதியாக பதிவிட்ட டுவிட்டிற்கு இப்போது வருத்தம் அடைகிறேன். நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் நான் இன வெறி பிடித்தவனோ, அல்லது பாலியல்வாதியோ அல்ல.


என்னுடைய நடவடிக்கைக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இந்த செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன். அப்போது பொறுப்பில்லாமல் இதை செய்துவிட்டேன். என்னுடைய இந்த செயல் மன்னிக்க முடியாதது ஆகும். அந்த காலத்தில் இருந்து நான் முழுவதும் முதிர்ச்சியடைந்து விட்டேன். எனது டுவிட்களுக்காக நான் முழுமையாக வருந்துகிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.


அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த 7 மாதங்களுக்கு விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கு பொருத்தமாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட டுவிட்டால் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அற்புதமான தொடக்கத்தை ராபின்சன் இழந்துள்ளார்.


மேலும் படிக்க : Ajinkya Rahane Birthday | இந்திய அணியின் `ஆபத்பாண்டவன்' அஜிங்கிய ரஹானே...!