பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற தோற்றம். உண்மையில் அது போன்ற உணர்வுகளை தரும் படைப்புகளை தந்தவர் தான் பாண்டிராஜ். புதுக்கோட்டை மாவட்டத்தின் டெல்டா வரவு. சினிமாவின் பிரதானம் பணம் தான் என்றாலும், அதில் சிலர் கருத்துகளுக்காக பயன்படுத்துவதுண்டு. அந்த வரிசையில் இயக்குனர் பாண்டிராஜ், பாசம், உறவு, நட்பு, பண்பு என நல்லொழுக்கங்களை போதிப்பவர். வன்முறைக்கு எதிரானவர். ரத்தம் சொட்டும் காட்சிகளுக்கு இடம் தராதவர். இதமான குடும்ப உறவுகளை உரசி செல்பவர். கவர்ச்சியற்ற கண்ணியம் காப்பவர். சினிமாவில் ஒருசிலரே தனக்கான கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்வர். காலம் அவர்களை சில நேரம் மாற்றும். ஆனால்,பாண்டிராஜ் போன்ற இயக்குனர்கள் மாறாத தங்கள் கொள்கையில் படம் செய்பவர்.


டிராப்... அவுட்... ஜான்ஸ்...!


சினிமா வாய்ப்புகள் யாருக்கும் எளிதல்ல. பாண்டிராஜூக்கு துணை இயக்குனர் ஆகவே பல ஆண்டுகள் எடுத்தது. இறுதியாக சேரனிடம் உதவி இயக்குனரானார். பாண்டிராஜ், சிம்புதேவன், ராமகிருஷ்ணன் மூவரும் ஒரே சேட். சேரனிடம் சேர்ந்த அந்த முதல் படம் டிராப் ஆனது. முதல் படமே டிராப் ஆனதில் நொந்து போனார் பாண்டிராஜ். பின் மீண்டும் வெற்றிக்கொடிக்கட்டு படம் ஓகே ஆகி பணிகளை துவக்கினார் சேரன். மகிழ்ச்சியோடு, ‛வெற்றிக்கொடி கட்டு... பெயரே செம்மயா... இருக்கே... கண்டிப்பா வெற்றி கொடி கட்டுறோம்...’ என, குஷியில் பணியை துவக்கினர் பாண்டிராஜ் மற்றும் சிம்புதேவன். 7 பேருக்கு மேல் உதவி இயக்குனர்கள் இருப்பதாக தயாரிப்பு தரப்பு கூறியதால், அந்த படத்திலிருந்தும் அவர்களுக்கான வாய்ப்பு பறிபோனது. ஒருவழியாக பாண்டவர் பூமியில் இணைந்து உதவி இயக்குனர் வாய்ப்பை பெற்றார் பாண்டிராஜ். சேரனின் அன்பை பெற்றதால் அவர் நடித்த சொல்ல மறந்த கதை மற்றும் தென்றல், சிதம்பரத்தில் அப்பாசாமி போன்ற படங்களில் சேரன் சிபாரிசில் தங்கர்பச்சானிடமும் பணியாற்றினார். அதன் பின் நண்பர் சிம்பு தேவனின் இம்சை அரசனில் இணை இயக்குனராக பணியாற்றிய பின், 7 படங்களை முடித்து 8 வது படம் தான் அவர் இயக்கிய பசங்க.



முதல் படத்திலேயே 3 தேசிய விருதுகள்!


இயக்குனர் ஆக முடிவு செய்த பின் பாண்டிராஜ் முதலில் கையில் எடுத்தது பீரியட் பிலிம் ஒன்றின் ஸ்கிரிப்ட் தான். ஆனால், முதல் படத்தில் அந்த அளவுக்கு பட்ஜெட் கிடைக்காது என்பதால், குறைந்த பட்ஜெட்டில் கதை தேவைப்பட்டது. அது தான் பசங்க. குழந்தைகளின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட படம். திரும்பிய திசையெல்லாம் பேசப்பட்ட படம், பேசிய படம். முதல் படத்திலேயே 3 தேசிய விருதுகளை பெற்றது பசங்க. சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த வசனத்திற்கான விருதுகளை அள்ளியது பசங்க. முதன்முறையாக வசனத்திற்கு என ஒரு பிரிவு துவங்கப்பட்டு, முதல் விருதை தமிழ் படமான பசங்க தான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ‛நான் வசனங்களுக்கு மெனக்கெடவே இல்லை... நான் பார்த்த குழந்தைகள் பேசியதை தான் எழுதினேன்,’ என, அப்போதே கூறினார். பாண்டிராஜ். எதார்த்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்.


இயக்குனர் பாண்டிராஜ் தந்த டாப் 5 ‛மயிலாஞ்சி’ பாடல்கள் இதோ...!



தயாரிப்பாளர்களின் இயக்குனர்


பாண்டிராஜ் படங்களில் வெளிநாட்டு டூயட்டுகள், ட்ரீம் மாஸ் செட்டுகள், பிரமாண்ட செலவுகள் எல்லாம் இருக்காது, ஹீரோ கதையின் நாயகனாக இருப்பார். ஹீரோயின் நாயகனின் நாயகியாக இருப்பார். இது தான் பாண்டிராஜ் ஸ்பெஷல். அடுத்தடுத்து அவர் இயக்கிய வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆள, பசங்க 2, கதகளி போன்ற படங்கள் எல்லாமே வெவ்வேறு விதமான ஜார்னரில் இருக்கும். கடைசியாக இவர் இயக்கிய இரு படங்களின் வசூல் சாதனையை மாஸ் ஹீரோக்களின் படங்கள் கூட முறியடிக்கவில்லை என்கிறது பாக்ஸ் ஆபிஸ் தரவுகள். அதில் முக்கியமானது கடைக் குட்டி சிங்கம். ஒரு குடும்பத்தின் பல உறவுகளை ஒரு பகுதியின் மண்வாசனை மாறால் அப்படியே காட்சிப்படுத்தியிருப்பார் பாண்டிராஜ். தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவருக்கும் போட்டதை விட அதிக லாபத்தை பெற்றுத் தந்த படம் கடைக்குட்டி சிங்கம் என பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டது. அதே போல நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயன் நடித்த இத்திரைப்படம், குடும்ப பின்னணி கொண்ட கதையே. இதுவும் ஒரு குறிப்பிட்ட மண்வாசனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கொண்டாட்டம், பாசம், காதல், கண்ணீர் என கொண்டாடப்பட்ட படம். இன்னொரு பாசமலர் என பத்திரிக்கைகள் பாராட்டிய படம். அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்.



இவர் நம்ம ஆளு!


ஆரம்பத்தில் சொன்னது தான், பாண்டிராஜ் நம்ம பக்கத்து வீட்டுக்காரரைப் போன்றவர். அவரது படைப்புகளும் அப்படி தன். இது நம்ம ஆளு என அவர் படம் எடுத்தார். உண்மையில் இவர் நம்ம ஆளு தான். ரத்தம் சொட்ட சொட்ட சிவப்புக்காட்சிகளும், பார்க்கவே முடியாத ‛ரெட் லைட்’ காட்சிகளும் திணிக்கப்படும் இந்த காலகட்டத்தில், காதில் கேட்கும் வசனங்களும், கண்ணால் பார்க்கும் காட்சிகளை தந்து, குடும்பமாக எந்த கூச்சமும் இல்லாமல் டிவியை பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை தந்த பாண்டிராஜ் இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இன்னும் பல்லாண்டு வாழ்ந்து, நல்ல படைப்புகளை வழங்க வாழ்த்துகிறது ABP நாடு!


பசங்க To நம்ம வீட்டு பிள்ளை... பாண்டிராஜ் ஸ்பெஷல் ஆல்பம்!