நடிகர் சூர்யாவை சந்தித்தது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கள் தமிழில் டிவீட் செய்துள்ளார். இதுதொடர்பான பதிவில், இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது சூர்யா. மனமார்ந்த வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். அதோடு, சூர்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சச்சின் வெளியிட்டுள்ளார்.


சச்சின் - சூர்யா காம்போ!


நடிகர் சூர்யாவும், சச்சினும் எதிர்பாராத விதமாக மும்பையில் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சூர்யா கேஷுவலாக சிரித்த முகத்துடன் நிற்க, சச்சின் டெண்டுல்கள் கூலிங் கிளாஸ் அணிந்த படி இருக்க, அவர்கள் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


சச்சினும்.. தமிழும்..


அண்மைக்காலங்களாக சச்சின் தமிழில் டிவீட் செய்வது அதிகரித்துள்ளது. சூர்யா உடனான சந்திப்பிற்கு முன்னதாக, டெஸ்ட்  போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த, தமிழக வீரர் அஸ்வினையும் தமிழில் டிவீட் செய்து சச்சின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு முன்பாக, சச்சினை அவரது இல்லத்தில் சந்தித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. கரியர் தொடக்கம் தொடங்கி ஏராளமான ஒற்றுமைகளுடன் நல்ல நண்பர்களாக வலம் வரும் இருவரது புகைப்படமும் அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது, ஏ.ஆர்.ரஹ்மானை இசைப்புயல் என தமிழில் குறிப்பிட்டு சச்சின் டிவீட் செய்து இருந்தார்.


சூர்யா 42


சிறுத்தை சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத தனது  42 படத்தில் தற்போது, நடிகர் சூர்யா தீவிரமாக பணியாற்றி வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பத்தானி முதன்முறையாக சூர்யாவுடன் இப்படத்தில் ஜோடி சேரும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்திராத வகையில், இப்படத்தில் 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடித்து அசத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


மேலும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் வரலாற்றுக் கதையாக இப்படம் உருவாகி வருவதாகவும், அரத்தர், முக்காட்டார்,  வெண்காட்டார், பெருமனத்தார்  மண்டாங்கர் என சூர்யா மொத்தம் 5 கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  மெகா பட்ஜட்டில் முழுவீச்சில் உருவாகி வரும்  இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். மொத்தம் 10 மொழிகளில் 3டி படமாக இப்படம் உருவாகி வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் இப்படத்தை முடிக்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை ஏற்கெனவே தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா 100 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  


முன்னதாக இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் சிவாவைப் பாராட்டியதுடன், 2 வெவ்வேறு காலக்கட்டத்தில்  இப்படத்தின் கதை நடைபெறுவதாகத் தெரிவித்திருந்தார்.