தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பகுதியில் உடலில் காயங்களுடன் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பசு மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு பின் கடல் பசுவை கடற்கரையில் பாதுகாப்பாக புதைத்தனர்.




தூத்துக்குடி கடற் பகுதி மன்னார் வளைகுடா கடற்பகுதி ஆகும். இங்கு அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதில் ஒன்று அரிய வகை கடல் பசுவாகும், கடல் புற்களை  மட்டுமே  உணவாக உண்டு உயிர் வாழக் கூடியது அறிய வகை கடல் பசுவை பாதுகாக்கும்  வகையில் மீனவர்கள் பிடிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.




இந்தியாவில் கட்ச் வளைகுடா பகுதியான குஜராத் மற்றும் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதியான தமிழ்நாடு கடல் பகுதி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுக்கடல் பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன.ஆழம் குறைந்து அலைகள் இல்லாத பகுதிகளில் தான் வாழும். காரணம் இந்த பகுதிகளில் தான் கடல் புற்கள் நன்கு செழித்து வளரும். இந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் பகுதி ஆழம் குறைந்தும் அலைகள் அதிக அளவில் இல்லாமலும் காணப்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் கடல் பசுக்கள் வாழ்கின்றன. கடல் பசுக்கள் ஆழ்கடல் பகுதி மற்றும் வலிமையான அலைகள் உள்ள கடல் பகுதியில் வாழாது.




இந்நிலையில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் பசு ஒன்று இறந்து கரை ஒதுங்கி உள்ளது. முத்துநகர் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்து  மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.




இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா வனச்சரக அலுவலர் ஜினோ பிளசில் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் முத்துநகர் கடற்கரைக்கு வந்து இறந்து கிடந்த அரியவகை கடல் பசுவை கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் இந்த அரியவகை கடற்பசு சுமார் 7 அடி நீளமும் 80 முதல் 100 கிலோ எடை கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்தது. மேலும் நான்கு முதல் ஐந்து வயது வரை இந்த கடற்பசுவுக்கு இருக்கலாம் என தெரியவந்தது.




மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கப்பல் அல்லது படகு ஏதேனும் ஒன்றில் மோதி முகத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடற்பசு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இதை அடுத்து மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அலுவலர்கள் முத்துநகர் கடற்கரை பகுதியிலேயே இறந்த கடல் பசுவை பாதுகாப்பாக மண்ணில் புதைத்தனர்.