கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம், சேலம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்று வளர்ச்சி திட்டபணிகள் மற்றும் சிறப்பு செயலாக்க திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டவாரியாக அரசால் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டபணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.



இதில் குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் கொண்டு வந்த சிறப்பு செயலாக்க திட்டங்களான மகளிருக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்டவற்றின் செயல்பாடு குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். குறிப்பாக முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் தமிழக அரசின் சிறப்பு செயல் திட்டங்களை மேம்படுத்த மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்தார். குறிப்பாக ஓய்வூதியம், இலவசவீட்டு பட்டா, வேலைவாய்ப்பு, நிலம் தொடர்பான மனுக்கள், கிராம உட்கட்டமைப்பு ஆகிய தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து அதிகம் அளவில் பெறப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்வர் சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மட்டுமே 18,814 மனுக்கள் பெறப்பட்டு இதில் 9,139 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காந்தி, மதிவேந்தர் ஆகிய நான்கு அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதலமைச்சர் தனிப்பிரிவு செயலாளர் உதயச்சந்திரன், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் ஆட்சியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய முதல்வர், “மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ள இந்த அரசு, மக்களின் குறைகளை தீர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர்ந்து அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கிராம மக்களுக்கான அடிப்படை வசதிகளை முறையாக தரமாக செய்து தர வேண்டும். அதிகாரிகள்தான் அரசின் முகமாக மாவட்டங்களில் பணியாற்றுகிறார்கள். அதிகாரிகள் கடினமாக உழைத்தால் பொதுமக்களுக்கு பயன் கிடைக்கும். வேளாண் உற்பத்தி மதிப்பு கூட்டல் தொடர்பாக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை சந்தித்து பேசினேன். விவசாயிகள் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கம். விவசாயிகள் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நகர்ப்புற பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வேகமாக வளரும் சேலம், ஓசூர் போன்ற நகரங்களில் குப்பைகளில் விரைந்து அகற்றுதல், பழுதான சாலைகளை சீர் செய்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.


ஆதிதிராவிடர் உள்பட விளிம்பு நிலை மக்களுக்கான நடவடிக்கைகளுக்கு மிகுந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகும் குறை தொடர்பான செய்திகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்களை கனிவாக நடத்த வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவோருக்கு உதவ ஆட்களை நியமிக்க வேண்டும். காவல்நிலையத்தில் வரவேற்பு அலுவலர் இருப்பது பாராட்டுக்குரியது. அரசு திட்டங்களை காலத்தே கொண்டு சேர்க்க செயலாற்ற வேண்டும்” என்று கூறினார்.