ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி டேவிட் வார்னர்(57) மற்றும் மனிஷ் பாண்டே(61) ஆகியோரின் அரைசதத்தால் 171 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூபிளசிஸ் அதிரடி காட்டினர். இவர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். இதனால் சென்னை அணி 3 விக்கெட் இழந்து 173 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 


 


அதிகபட்சமாக சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 12 பவுண்டரிகளின் உதவியுடன் 75 ரன்கள் குவித்தார். இந்நிலையில் யார் இந்த ருதுராஜ் கெய்க்வாட்? எவ்வாறு சிஎஸ்கே அணியில் இடம்பிடித்தார்?






மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் சிறுவயது முதல் தனது அசாத்திய ஆட்டத்தால் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தார். குறிப்பாக 2016-17ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடம்பிடித்து அசத்தினார். அப்போது முதல் இவர் மீது அதிக வெளிச்சம் பட்டது. இந்த ஸ்டைலிஷ் மற்றும் திறமையான வீரர் யார் என்று உள்ளூர் கிரிக்கெட்டில் பிரபலமானார். 


 


பின்னர் இந்தியா ஏ அணிகளுக்கும் தேர்வாகி அசத்தினார். இவருக்கு 2018-19ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி தொடரில் சிறப்பானதாக அமைந்தது. ஏனென்றால் இந்தத் தொடருக்கு பிறகு 2019ஆம் ஆண்டு சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட்டை ஏலத்தில் எடுத்தது. எனினும் 2019ஆம் ஆண்டு தொடர் முழுவதும் சென்னை அணியில் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.





இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சில நாட்கள் பயிற்சி செய்ய முடியாமல் தனிமை படுத்தப்பட்டிருந்தார். உடல்நிலை சரியான பிறகு  விளையாடிய முதல் 3 போட்டிகளில் சரியான ஸ்கோரை அவரால் எட்டமுடியவில்லை. நான்காவது முறையாகக் கிடைத்த வாய்ப்பை ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாகப் பயன்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்தப் போட்டியிலும் சென்னை அணி வெற்றிப் பெற முக்கிய காரணமாக அமைந்தார். 


 






கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால்,  நடப்பு தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் டூபிளசிஸ் உடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருகிறார்.இந்தத் தொடரில் தற்போது வரை 2 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும் இத்தொடரில் களமிறங்கிய 6 போட்டிகளில் 192 ரன்கள் அடித்துள்ளார். சென்னை அணிக்கு வாட்சனின் ஓய்விற்கு பிறகு நல்ல தொடக்க வீரர் என்ற கவலை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது தனது ஸ்டைலிஷ் ஆட்டத்தின் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் அசத்தி வருகிறார். நேற்றைய போட்டியில் இவரின் அசத்தலான ஆட்டத்தை பலரும் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.