ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டூபிளசிஸ்-ருதுராஜ் கெய்க்வாட் முதல் விக்கெட்டிற்கு 129 ரன்கள் அடித்து அசத்தினர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த டாப்-5 தொடக்க ஜோடிகள் யார் யார்?
5. கெயில்-தில்ஷான்(167):
2013ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் மற்றும் தில்ஷான் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் புனே அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். குறிப்பாக இந்தப் போட்டியில் தான் கெயில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் கடந்து அசத்தினார், இப்போட்டியில் முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 167 ரன்கள் எடுத்தது.
4. டூபிளசிஸ்-வாட்சன் (181*):
2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது. எனினும் இந்தத் தொடரில் சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை ஒரு போட்டியில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டூபிளசிஸ்-வாட்சன் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. டூபிளசிஸ்(87*) மற்றும் வாட்சன் (83*) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
3. கே.எல்.ராகுல்-மயங்க் அகர்வால்(183):
2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 183 ரன்கள் அடித்து அசத்தினர். ராகுல் 69 ரன்களும், மயங்க் அகர்வால் 109 ரன்களும் எடுத்து ஆட்டமிழ்ந்தனர்.
2. கம்பீர்-கிறிஸ் லின்(184*)
2017ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் லயன்ஸ் அணி 183 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்பீர்-லின் ஜோடி அதிரடி காட்டியது. இவர்கள் இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 184* ரன்கள் அடித்து கொல்கத்தா அணியை வெற்றிப் பெற செய்தனர். இதில் கம்பீர்(76*),லின்(93*) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
1.டேவிட் வார்னர்-ஜானி பேர்ஸ்டோவ்(185):
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஜோடியான வார்னர்-பேர்ஸ்டோவ் ஆர்சிபி பந்துவீச்சை திணறடித்தனர். இவர்கள் இருவரும் சதம் விளாசி பெங்களூரு அணியை தவிக்க வைத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 185 ரன்கள் சேர்த்து அசத்தினர். வார்னர் (114) ரன்களுடன் ஆட்டமிழ்ந்தார். எனினும் பேர்ஸ்டோவ் 100* ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஜோடி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும்.