இந்திய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐ.பி.எல். எவ்வளவு பிரசித்தி பெற்றதோ, அதேபோல தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டி.என்.பி.எல். மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தொடர் மூலமாகவே நடராஜன், விஜய் சங்கர் போன்றோர் இந்திய அணிக்குள் நுழைந்தனர். மேலும், ஷாருக்கான் போன்ற பல வீரர்கள் ஐ.பி.எல். அணியில் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.


இந்நிலையில், டி.என்.பி.எல். போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, முதல் போட்டி வரும் ஜூன் 4-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 29-ஆம் தேதி குவாலிஃபயர் போட்டியும், 30-ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெற உள்ளது. ஜூலை 2-ஆம் தேதி குவாலிஃபயரின் 2-ஆம் ஆட்டம் நடைபெறவுள்ளது. இறுதி ஆட்டம் வரும் ஜூலை 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. 


சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் கில்லிஸ், லைகா கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன், மதுரை பாந்தர்ஸ் ஆகிய எட்டு அணிகள் மோதுகின்றனர். கொரோனா பரவல் அலை நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் நடத்தவே கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், டி.என்.பி.எல். போட்டிகள் நடத்துவதற்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்திருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.