திருச்சி மாவட்டத்தில் கடந்த 28 ஆண்டுகளாக  காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் மேயராக இருந்துள்ளனர். குறிப்பாக பெண்களின் ஆளுகைக்கு கீழ் திருச்சி மாநகராட்சி தொடந்து இருந்து வந்த நிலையில் தற்போது பொது பிரிவினர்களுக்கு ஒதுக்கபட்டுள்ளதால் ஆண் மேயராக வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகையால் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய இரண்டிலும் உள்ள மூத்த, முக்கிய நிர்வாகிகள் மேயர் பதவி பெற முயற்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில்  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்று பெற்று திருச்சியை தனது கோட்டையாக மாற்றியது. இதனை தொடர்ந்து தற்போது நடக்கவிற்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, மேயர் பதவியை கைப்பற்றி மீண்டும் திருச்சியை திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என நோக்கத்தில்  திமுக களம் இறங்கியுள்ளது. 




தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும், 19 ஆம் தேதி நடக்க விருக்கிறது. திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை 51 வார்டுகளில் வேட்பாளர்களை அறிவித்தன் மூலம், திமுகவை சேர்ந்தவருக்கு தான் மேயர் பதவி என்பது உறுதியாகி இருக்கிறது. திருச்சியில் கிட்டத்தட்ட 6 முனைப்போட்டி நிலவுவதாலும், சுயேச்சைகளும் களமிறங்குவார்கள் என்பதாலும், மாநகராட்சித் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க துவங்கிவிட்டது.


திருச்சி மாநகரத் தந்தை என்றழைக்கப்படும் மேயர் பதவியை கைப்பற்ற  திமுகவில் மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்களில் முதன்மையானவர், முன்னாள் துணைமேயர் அன்பழகன். மூத்த அமைச்சர் நேருவின் நிழல் போல வலம் வரும் இவர் தான் வருங்கால மேயர் என்று  உறுதியாகிவிட்டதாக கூறுகின்றனர் நேரு தரப்பினர். இவருடைய வழக்கமான வார்டு 55. அந்த வார்டு ஏற்கெனவே மற்றொருவருக்கு ஒதுக்கப்படதால், தற்போது, 27வது வார்டில் வேட்பாளராக போட்டியிடுகிறார். 




திமுக அமைச்சர் நேருவுக்கு எதிராக அமைதியாக பனிப்போர் நடத்தும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பிலும் மேயர் பதவிக்கு இருவர் களமிறக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மகேஷின் உறவினரும், மலைக்கோட்டை பகுதிச் செயலாளருமான மதிவாணன், 16வது வார்டில் களம் காண்கிறார். இவர் தான் இந்த அணியில் பிரதானமானவர். மற்றொருவர் கே.என்.சேகரன். இரண்டு முறை, திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆக இருந்தவர். இவர் தான் சட்டமன்ற தேர்தலின் போது அமைச்சர் மகேஷுக்கு, தனது திருவெறும்பூர் தொகுதியை விட்டு தந்தவர். இவர் தற்போது 40வது வார்டில் கவுன்சிலருக்கு நிற்கிறார். இவருக்கு தான் மேயர் பதவி'என்று  சேகரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் திருச்சி மேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி எழுந்துள்ளது.