இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று மான்சஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்,  வீரர்களின் பாதுகாப்பு கருதி இன்று நடைபெற இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தனியாக அழைத்து வர திட்டமிட்டு வந்தனர். 


இந்நிலையில் முதற்கட்டமாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் இன்று தனி விமானம் மூலம் அபுதாபி வந்தடைந்தனர். இந்த மூன்று பேரும் தங்களுடைய குடும்பத்தினரும் தனியாக விமானத்தில் வந்தனர். இவர்களின் வருகை தொடர்பாக மும்பை இந்தியனஸ் அணி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இந்த மூன்று வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகிய அனைவரும் இன்று தனி விமானம் மூலம் அபுதாபி அழைத்து வரப்பட்டனர்.






அவர்களுக்கு மான்செஸ்டரில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது அது நெகட்டிவ் என வந்தது. மீண்டும் அவர்கள் அனைவரும் அபுதாபி வந்தவுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவர்களுக்கு நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பிசிசிஐயின் அறிவுறுத்தளின்படி  6 நாட்கள் தனிமையில் இருப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளது.  


 






மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. அதன்பின்னர் 23-ஆம் தேதி கொல்கத்தா அணியையும், 26-ஆம் தேதி பெங்களூரு அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. பின்னர் 28ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும், அக்டோபர் 2-ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும், அக்டோபர் 5-ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடனும், அக்டோபர் 8-ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும் விளையாடுகிறது. 


மேலும் படிக்க:மான்செஸ்டரில் இருந்த 5 வீரர்களுக்கு 6 நாள் தனிமை.. சி.எஸ்.கேவின் அதிரடி திட்டம் !