அதில் சர்ச்சைக்குரிய மற்றொரு காட்சியும் இருக்கிறது. சட்டப்பேரவையில் இரு தரப்பினரினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத்தின் சேலையை ஒருவர் பிடித்து இழுக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.


1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. எம்ஜிஆர் இறந்த பின் நடைபெற்ற தேர்தலில் வென்று அப்போது தான் ஆட்சியை பிடித்திருந்தது திமுக. அப்போது நிதியமைச்சர் பொறுப்பும் முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் வசமே இருந்தது. அப்போது ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவர். கருணாநிதியின் பட்ஜெட்டை படிக்க ஆரம்பிக்க எதிர்தரப்பில் அமர்ந்திருந்த ஜெயலலிதா தனது ஃபோன் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வருவதாகவும் பேசினார். அப்போது சபாநாயகராக இருந்த தமிழ்க்குடிமகன் அதைப்பற்றி பின்னர் விவாதிக்கலாம் இப்போது பட்ஜெட்டை முதலமைச்சர் வாசிக்கட்டும் என்றார். முதலமைச்சர் கருணாநிதி எழுந்து பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பிக்க, அவரை நோக்கி பாய்ந்த அதிமுகவினர் அவர் கையில் இருந்த பட்ஜெட் உரையை பிடுங்கி கிழித்து எறிந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இந்த கைகலப்பின் போது கேகேஎஸ்எஸ்ஆர் மைக்கை எடுத்து அடிக்க வீரபாண்டி ஆறுமுகத்தின் மண்டை உடைந்தது. முதலமைச்சர் கருணாநிதியின் கண்ணாடியும் உடைந்தது. 



 தலைமுடி கலைந்து, சேலை கிழிந்த நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா வாயிலில் காத்திருந்த செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது தனது சேலையை துரைமுருகன் பிடித்து இழுத்து கிழித்துவிட்டதாகவும், அவர்கள் தாக்கியதில் தனது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையிலேயே ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்தினால் நாட்டு மக்களின் நிலை என்ன? யாருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை; இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று பேசினார்.


இந்த சம்பவம் திமுகவினர் மீது ஒரு தீராத களங்கத்தை உருவாக்கியது. இந்த சம்பவம் ஜெயலலிதா மீது தமிழ்நாட்டு பெண்களுக்கு பரிவை ஏற்படுத்தியது. ஒற்றை ஆளாக இத்தனை பேரை சமாளிக்கிறாரே என்று பெண்கள் மத்தியில் அவருக்கு சிங்கப்பெண் இமேஜை உருவாக்கியது.


ஆனால், சட்டப்பேரவையில் ஜெயலலிதா சேலை கிழிக்கப்படவே இல்லை என்று பல்வேறு கட்டங்களில் திமுக மறுத்து வந்திருக்கிறது. ஆனாலும் விட்டபாடில்லை. இந்த சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழித்து 2003ல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது இந்த சம்பவம் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய ஜெயலலிதா 1989ல் துரைமுருகன் எனது சேலையை பிடித்து இழுத்தார். என் சேலை  கிழிந்து நான் அவமானப்படுத்தப்பட்டேன் என்றார். அதை மறுத்த துரைமுருகன்  நான் உங்களை தாக்கவே இல்லை. நீங்கள் இருந்த இடத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்தேன் என்றார்.


பின்னர் பேசிய பேராசிரியர் க.அன்பழகனும், 1989ல் இந்த சம்பவம் நடந்தபோது சட்டப்பேரவையில் நானும் தான் இருந்தேன். ஜெயலலிதா கூறுவது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை. கருணாநிதி எழுந்து பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கியபோது, ''டோன்ட் ரீட், யூ கிரிமினல் டோன்ட் ரீட்.." என்று எதிரில் இருந்து ஒரு குரல் கேட்டது. அதை யார் கூறினார்கள் என்று நான் கூற விரும்பவில்லை. அதன்பின்னர்தான் அசம்பாவிதங்கள் அரங்கேறியது. அன்றைக்கு ஒரு ஆவேசமான சூழ்நிலை நிலவியது அவ்வளவுதான் என்று விளக்கமளித்தார்.



இதே சட்டமன்றத்தில் கருணாநிதி அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்டமன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது நான் சொல்வது என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர் அவர்கள் மீது சத்தியமாக சொல்வதாகும். முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா நான் பிரதான எதிர்கட்சித் தலைவர்; முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும்போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னார். தயவு செய்து எங்களை அடியாளாக மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனசாட்சி இடம் தரவில்லை. என்று நான் கூறினேன்” இதைச் சொன்னது வேறு யாருமில்லை. இந்த சம்பவம் நடந்த சமயத்தில் ஜெயலலிதாவுடன் இருந்த திருநாவுக்கரசர் தான். அதோடு, இன்றைக்கு சட்டமன்றத்திலே வன்முறை நடந்தால் இன்றைக்கு மாலையே ஆட்சி கலைக்கப்படுகிறது என்று எனக்கு தகவல் வந்திருக்கிறது என்று ஜெயலலிதா கூறியதாகவும் சட்டப்பேரவையிலேயே பேசியிருக்கிறார் திருநாவுக்கரசர். இதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தன் அறிக்கையில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். 


இச்சம்பவத்தின் போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, நிதியமைச்சர் என்ற முறையில் நான் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கியபோது, எதிர்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா எழுந்து “முதலமைச்சர் ஒரு கிரிமினல் குற்றவாளி; அவர் நிதிநிலை அறிக்கையை படிக்கக்கூடாது” என்று கூறி என் கையிலே இருந்த நிதி நிலை அறிக்கையைப் பிடுங்கிட முற்பட்டார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என் கையில் இருந்த நிதிநிலை அறிக்கையை பிடுங்கி கிழித்து எறிந்தார். அதை தடுக்க முயன்ற என் முகத்தில் குத்தியதில் கண்ணாடி நொறுங்கி கீழே விழுந்தது. இவ்வளவையும் செய்தது அதிமுக தான் என்று குறிப்பிட்டுள்ளார்.


“1989 நடந்த சட்டப்பேரவையில் சம்பவங்கள் எல்லாம் ஜெயலலிதாவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்” என்று ஏற்கனவே விளக்கமளித்திருக்கிறார் அப்போது காங்கிரஸ் எம் எல் ஏவாக இருந்த பீட்டர் அல்போன்ஸ்.


இந்த சம்பவத்தின் போது வீரபாண்டி ஆறுமுகத்தின் மண்டையை உடைத்ததாகக் கூறப்படும் கேகேஎஸ்எஸ்ஆர் இப்போது திமுகவில் அமைச்சர். சேலை கிழிப்பு விவகாரம் தொடர்பாக பலராலும் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டபோதிலும், ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியது போன்று தலைவி திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.



இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகளைக் கடந்தும் மீண்டும் மீண்டும் இச்சம்பவம் நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிமுக தரப்பில் ஜெயக்குமார் படத்தை பார்த்துவிட்டு தன் கருத்துகளை கூறியிருக்கிறார். ஆனால், திமுக தரப்பிலிருந்து எந்த கருத்தும் இல்லை. சட்டப் பேரவை வரலாற்றில் நடைபெற்ற இப்படி ஒரு அசிங்கம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படுவது தமிழகத்தின் மாண்புக்கு ஏற்புடையதல்ல. எனினும், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து உறுதியான பதில் வராதவரை இச்சம்பவம் என்றென்றும் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.