இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் கிரிக்கெட், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.


முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றபோது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஃபீல்டிங் செய்தபோது காயம் ஏற்பட்டது.
இதன்காரணமாக, 2ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் சேஸிங்கில் கடைசியாக 8ஆவது விக்கெட்டாக களமிறங்கினார் ரோகித் சர்மா. கை விரலில் காயம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் ஜெயிக்க வேண்டும் என்று அணிக்காக விளையாடினார்.






அந்த ஆட்டத்தில் அவர் அரை சதம் விளாசியும் கூட கடைசி ஒரு பந்துக்கு 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.


இதனிடையே, கட்டை விரலில் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா, மருத்துவருடன் கலந்தாலோசிக்க மும்பை வந்துள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அவர் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவரா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, ரோகித் சர்மா எப்போதுமே தனது ஹிட் பேட்டிங்கால் ’ஹிட் மேன்’ என்ற பெயர் பெற்றவர். இந்திய அணிக்காக பல போட்டிகளில் தனித்து நின்று வெற்றிபெற்று தந்துள்ளார். அதேபோல், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த பிறகும், ரோகித் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்து அனைவரது மனதையும் வென்றார். நேற்றைய போட்டியில் 28 பந்துகளில்  (3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) 51 ரன்கள் குவித்தார். நேற்றைய இன்னிங்ஸில் 5 நீண்ட சிக்ஸர்களை அடித்ததன் மூலம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். 


வங்கதேசத்திற்கு எதிராக மூன்றாவது சிக்ஸரை அடித்ததன்மூலம், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார். இவருக்கு முன்னோடியாக சர்வதேச கிரிக்கெட்டில் 553 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். வேறு எந்த இந்திய வீரரும் 400 சிக்ஸர்களுக்கு மேல் அடித்ததில்லை. இந்திய வீரர்களில் 359 சிக்ஸர்களுடன் தோனி ரோஹித்துக்கு மிக நெருக்கமாக உள்ளார்.