சவூதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச ரெட் சீ திரைப்பட திருவிழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக பிரபலங்கள் பலரும் இளம் வயதில் திருமணம் செய்துக் கொள்ளாமல், தங்களுடைய கேரியரில் வெற்றி அடைந்த பிறகு அல்லது கேரியரில் சரிவு ஏற்படும் போது அந்த முடிவை கையில் எடுக்கிறார்கள். இதில் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் இல்லை. இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தாலும் வயதுக்கும் திருமண வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்த்தவே செய்கிறார்கள்.
அந்த வகையில் 40 வயதான பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கும், 29 வயதான நடிகை ஆலியா பட்டுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. பாலிவுட்டின் மிகவும் கியூட் ஜோடிகளாக வலம் வந்த இந்த தம்பதியினருக்கு இந்திய திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆலியா பட் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாக இருவரும் தங்கள் சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்தனர். இந்த குழந்தைக்கு ராஹா என பாட்டி நீது கபூர் பெயர் சூட்டினார். தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்பதே இப்பெயரின் பொருளாகும். இதனிடையே குழந்தை பிறந்த பிறகு எங்களின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டது என்றும், எனது பயணம் எப்படி செல்ல போகிறது என்பதை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆலியா பட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சர்வதேச ரெட் சீ திரைப்பட திருவிழாவில் பேசிய ரன்பீர் கபூர், ராஹா குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரிடம் தந்தையான பிறகு அவருக்கு என்ன மாற்றத்தை உணர்ந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது 40 வயதாகும் தான் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டேன் என்று ஆச்சரியப்படுகிறேன்.
எனது மிகப்பெரிய கவலை என்னவென்றால், குழந்தைக்கு 20 அல்லது 21 வயதாக இருக்கும்போது, எனக்கு 60 வயது இருக்கும். நான் அவர்களுடன் கால்பந்து விளையாட முடியுமா? நான் அவர்களுடன் ஓட முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மனைவி ஆலியா பட் தன்னை விட அதிகமாக வேலை செய்வதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். ரன்பீர் கபூரின் இந்த கருத்து ரசிகர்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.