டென்னிஸ் ஜாம்பவானான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், சமீபத்தில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இங்கிலாந்து டென்னிஸ் மைதானத்தில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தை நினைவு கூர்ந்தார். 


ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்பில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பற்றி அவர் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன், இங்கிலாந்தில் நடைபெறும். இதுவரை மொத்தம் 8 முறை விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ரோஜர் பெடரர். டென்னிஸ் உலகில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார்.


இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களை விம்பிள்டன் மைதானத்தில் நுழைய அனுமதிக்கவில்லையாமே? அது உண்மையா? என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு ரோஜர் ஃபெடரர் பதிலளித்து கூறியதாவது:


ஆம் அது உண்மைதான். என்னை அனுமதிக்கவில்லை. எனது கால் மூட்டில் காயம் ஏற்பட்டிருந்ததால் லண்டனில் உள்ள மருத்துவமரிடம் செகண்ட் ஒபினியன் கேட்க சென்றிருந்தேன். அவரை சந்தித்துவிட்டு தாய்நாடு திரும்ப வேண்டியிருந்தது. சரி நேரம் இருக்கிறதே அதுவரை என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சரி, விம்பிள்டன் மைதானத்துக்குச் சென்று ஒரு தேநீர் அருந்துவோம் என்று அங்கே சென்றேன். 


நான் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடக்கும்போது மட்டும் தான் அங்கு சென்றிருக்கிறேன். சாதாரணமாக எந்த நாளிலும் அங்கு சென்றதில்லை. ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் (ALTEC) -க்கு சிறப்பு விருந்தினர்கள் நுழையும் வழியில் செல்ல முயன்றேன். அப்போது என்னுடன் எனது பயிற்சியாளர் இருந்தார். அவரிடம் நான் உள்ளே செல்வது எப்படி என்று கேட்டுவிட்டு வருகிறேன் என்று கூறி காரில் இருந்து இறங்கி சென்றேன்.


அப்போது  பெண் பாதுகாவலர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் எப்படி உள்ளே செல்ல வேண்டும் என்றேன். அவர் என்னிடம் உறுப்பினர் அட்டையைக் காண்பிக்குமாறு கோரினார். விம்பிள்டன் போட்டியில் வென்றால் அந்த மைதானத்தில் நுழைவதற்கான உறுப்பினர் அட்டை தாமாகவே உருவாக்கப்பட்டு விடும்.






என்னிடம் உறுப்பினர் அட்டை இல்லை. ஒருவேளை அது எனது வீட்டில் இருக்கலாம். ஆனால், எனக்கு உறுப்பினர் அட்டை குறித்து எல்லாம் நிஜமாகவே தெரியாது. நான் உறுப்பினர்தான். ஆனால், இப்போது என்னிடம் உறுப்பினர் அட்டை இல்லை. நான் எப்படி உள்ளே செல்ல வேண்டும் என்று கேட்டேன்.


அதற்கு அந்தப் பெண் காவலர்.  நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும். அப்போது தான் உள்ளே அனுமதிக்க முடியும் என்று மறுபடியும் கூறினார். நான் ஓகே. ஆனால், நான் போட்டி நடக்கும்போதுதான் இங்கு வந்திருக்கிறேன். இப்போது எப்படி உள்ளே செல்வது என்று தெரியவில்லை. எப்படி போக வேண்டும் என்று சொல்லுங்கள் என்றேன். அதற்கு அது அந்தப் பக்கம் இருக்கிறது. ஆனால், நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டுமே என்று மறுபடியும் கூறினார்.


நான் கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று விட்டேன். பின்னர், நான் விம்பிள்டனில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறேன். என்னை நம்புங்கள். நான் எப்படி உள்ளே செல்வது என்று அந்தப் பெண் காவலரிடம் மறுபடியும் கேட்டேன்.


ஆனால், அவர் அனுமதிக்கவில்லை. நான் காருக்கு திரும்பினேன். எனது கோச் எப்படி போக வேண்டும் என்றார். நான் அதை பற்றி பேசாதீர்கள் என்றேன். பிறகு காரை எடுத்துக் கொண்டு மைதானத்தின் மறுபக்கம் வந்தோம். காரை விட்டு இறங்கி உள்ளே செல்ல சென்றோம். அப்போது திடீரென ஒருவர் வந்து, பெடரர்.. விம்பிள்டனுக்கு எப்போது வந்தீர்கள். ஓ மை காட். வாங்க செல்பி எடுத்துப்போம் என்றார்.


ஓ.. எடுக்கலாமே என்றேன். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள். பெடரர் இங்கே என்ன திடீரென வந்திருக்கிறீர்கள். உங்களிடம் உறுப்பினர் அட்டை உள்ளதா என்று அதே கேள்வியைக் கேட்டனர்.


என்னிடம் இல்லை என்றேன். பின்னர், உள்ளே சென்று பெறலாமா என்றேன். நிச்சயமாக கதவை திறக்கிறோம் என்று கூறி திறந்துவிட்டனர். உள்ளே முக்கியப் பிரமுகர்கள் இருந்தனர். நான் மறுபக்கம் சென்று அந்தப் பெண் காவலருக்கு நான் உள்ளே வந்துவிட்டேன் என்று கூறலாம் என்று நினைத்தேன். ஆனால், அதை செய்யவில்லை என்றார் பெடரர்.


இந்தச் சம்பவத்தை நினைவுகூரும்போது அவர் புன்னகை செய்தார். இது ஒரு ஜாலியான நேர்காணலாக இருந்தது. அவர் எதுவும் புகார் தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளரும் அவரது செயலை பாராட்டினார்.


உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், கடந்த சில ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், 41 வயதான ஜோரர் பெடரர் ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


ரோஜர் பெடரர் இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.