நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 2கே கிட்ஸ்களை கவர ரஜினியின் சூப்பர் ஹிட் படம் ஒன்று மீண்டும் ரீ- ரிலீஸாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்தை பிடித்தவர்கள் யார்தான் இல்லை. அவரின் ஸ்டைல், பன்ச் டயலாக்குகள் என ஒவ்வொன்றும் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத மாஸ் சம்பவங்களாகவே உள்ளது. இதனிடையே ரஜினி வரும் டிசம்பர் 12 ஆம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை வேற மாதிரி மறக்க முடியாத நினைவுகளால் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த முறை ரஜினியே யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்ப்ரைஸ் அளித்துள்ளார். 






அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு  இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா 4வது முறையாக ரஜினியை வைத்து இயக்கிய படம் “பாபா”. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினியே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். படம் ரிலீசான சமயத்தில் ஏற்பட்ட பெரும் பிரச்சனைகளை அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகம் கூட அவ்வளவு எளிதில் இன்றளவும் மறந்திருக்காது. ஆனால் பெரும் எதிர்பார்ப்பை மீறி வெளியான பாபா படம் படுதோல்வி அடைந்தது. 


ஹீரோயினாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் பாபா படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதேசமயம் சமீபகாலமாக மீண்டும் ஆன்மீக ரீதியான படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவதால் பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய ரஜினி முடிவெடுத்திருந்தார்.


அதன்படி தமிழகம் முழுவதும் பாபா படம் நாளை ரிலீசாகிறது. வழக்கமான ரஜினி படங்களுக்கு கொடுக்கப்படும் மாஸான வரவேற்பை போன்று காலை 5 மணிக்கு முதல் காட்சி என தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் பாபா படத்திற்கு போட்டியாக ரஜினியின் இன்னொரு படமும் ரிலீசாகியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி சிவாஜி தி பாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். ஸ்ரேயா ஹீரோயினாக நடித்த நிலையில் நடிகை நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். 






மேலும் வில்லனாக சுமன், விவேக், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, வடிவுக்கரசி, மணிவண்ணன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரஜினியின் ஸ்டைலிஷான படங்களில் ஒன்று. குறிப்பாக 2கே கிட்ஸ்கள் இந்த ரஜினியின் ஸ்டைலை பார்த்து தான் வளர்ந்தார்கள் என்பதால் 90ஸ் கிட்ஸ்களுக்கு பாபா படம் ரிலீஸ் செய்யப்பட்டதைப் போல, சிவாஜி படம் ரிலீசாகியுள்ளது. சென்னையில் சில தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படத்திற்கான டிக்கெட்டுகளும் விறுவிறுப்பாக விற்று தீர்ந்துள்ளது.