ரெய்கிஜாவிக் ஓபன் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இந்திய செஸ் விளையாட்டு உலகில் வேகமாக வளர்ந்து வரும் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர் பிரக்ஞானந்தா. இவர் ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற ரெய்கிஜாவிக் ஓபன் செஸ் தொடரில் பங்கேற்றார். இவருடன் மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷூம் பங்கேற்று இருந்தார்.
இந்த செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா 9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த செஸ் தொடரில் இவர் டி.குகேஷ் மற்றும் பிரஞ்சு வீரர் மேத்யூ கார்னெட் ஆகியோரை கடைசி இரண்டு சுற்றுகளில் வீழ்த்தினார். மேலும் இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா அமெரிக்காவை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் அபிமன்யூ மிஸ்ராவையும் தோற்கடித்து அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் தரவரிசைப் புளிக்களில் 13.2 புள்ளிகளை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். தற்போது பிரக்ஞானந்த 2624 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ளார். ரெய்கிஜாவிக் ஓபன் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 17-வது இடத்தை பிடித்தார். இத் தொடரில் மற்ற இந்திய வீரர்களான தானியா சச்தேவ் 21-வது இடத்தையும், அதிபன் 34-வது இடத்தையும் பிடித்தனர்.
முன்னதாக ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 8ஆவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மெக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் நன்றாக நகர்த்தல்களை மேற்கொண்டார். டார்ஸ்ச் வகை கேமை பயன்படுத்திய பிரக்ஞானந்தா வெறும் 19 நகர்த்தலில் உலகின் நம்பர் ஒன் வீரரான மெக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் முதல் முறையாக உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியிருந்த பிரக்ஞானந்தா இம்முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்